இந்தியா

தாஜ்மகாலை புனிதப்படுத்துவதாக அறிவித்த அயோத்தி துறவி கைது

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அயோத்தியில் ராம் ஜானகி மடத்தின் தலைவர் துறவி பரமஹன்ஸ் தாஸ் தனது இரண்டு சீடர்களுடன் ஏப்ரல் 27-ல் ஆக்ரா வந்திருந்தார். இவர், இந்தியாவில் இந்து ராஜ்ஜியம் அமைத்து, முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்ற வலியுறுத்தி இரு முறை அயோத்தியில் உண்ணாவிரதமும் இருந்தவர்.

பரமஹன்ஸுக்கு, தம் கையிலிருந்த இரும்பாலான பிரம்ம தண்டத்துடன் தாஜ்மகால் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அயோத்திக்கு திரும்பியவர் இன்று (மே 5) தாஜ்மகாலினுள் சாதுக்கள் சபையை நடத்தி, அதை புனிதப்படுத்த உள்ளதாக அறிவித்தார். இதற்காக தமது சீடர்கள் அனைவரும் தாஜ்மகாலுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தாஜ்மகாலின் மசூதியினுள் நடந்த ரம்ஜான் தொழுகையின் போது பரமஹன்ஸ் மீண்டும் ஆக்ரா வந்தார். காலை 8 மணிக்கு தாஜ்மகாலில் நுழைய முயன்ற அவரை நண்பகல் 12 மணிவரை போலீஸார் பேசி சமாதானப்படுத்தி திருப்பி அனுப்ப முயன்றனர். இது முடியாமல் போகவே, கைது செய்யப்பட்ட பரமஹன்ஸ், ஆக்ரா அரசு விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டார். இவருடன் துறவியின் இரு சீடர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனது கைதை எதிர்த்து உணவு, நீர் அருந்தாத துறவி பரமஹன்ஸ் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘இந்தியா ஒரு இந்து ராஜ்ஜியமாக ஹரித்துவார் சாதுக்கள் சபையில் அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே, சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்ட தாஜ்மகாலினுள் சிவன் சிலையை நிறுவுவோம். அதுவரை நாம் ஓயமாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT