இந்தியா

பருவமழையை துல்லியமாக கணிக்கும் வானிலை ஆய்வு செயல்பாட்டு இயக்கம்: மத்திய அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

பருவமழை பெய்வதை துல்லியமாக கணிக்கும் வானிலை ஆய்வு செயல்பாட்டு முறையை மத்திய அரசு தொடங்கி உள்ளது என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் புதுதில்லியில் தேசிய ஊடக மையத்திலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த செய்தியாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் அவர் உரையாடினார்.

மத்திய அரசு தொடங்கியுள்ள தேசிய வானிலை ஆய்வு செயல்பாட்டு இயக்கம் மாதாமாதம் வாராவாரம் மாநிலங்களுக்கு வழங்கும் பருவநிலை முன்னறிவிப்பு விவசாயிகளுக்கும் கடலோர மீனவர்களுக்கும் பேருதவியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

பருவமழை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இந்த ஆண்டில் பருவ மழை சாதகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது என்று பதிலளித்தார். இந்த ஆண்டு பருவ மழை நீண்டகால சராசரி மழை அளவில் 106 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அறிவியல் மற்றும் தொழில்கள் ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகள் பற்றி தெரிவித்த அமைச்சர், நீரிழிவு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மத்திய ஆயுஷ்துறை அமைச்சகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள பி.ஜி.ஆர் - 34 மருந்துக்கு அதனைப் பயன்படுத்தும் மக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்துள்ளது என்றார். ரத்தத்தில் சர்க்கரை அளவை இயல்பாக வைத்திருக்கவும் அதிகமான சர்க்கரை காரணமாக ஏற்படும் உபாதைகளிலிருந்து விடுவிக்கவும் இந்த மருந்து உதவுகிறது என்றும் ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளவர்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு இது உதவுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

டெங்கு மற்றும் மலேரியா நோய்களுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இதற்கான ஆராய்ச்சி உயர்ந்த கட்டத்தில் உள்ளது என்றும் இந்த தடுப்பூசி மருந்து விரைவில் பரிசோதனை செய்யப்படும் என்றும் பதிலளித்தார்.

ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய பயன்படுத்தப்படும் ஸ்டென்ட் சாதனங்களை உள்நாட்டிலேயே குறைந்த செலவில் தாயரிக்கும் முயற்சியை பிரதமரின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்கள் ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டுள்ளது என்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டென்ட் விலை அதிகமாக இருப்பதால் உள்நாட்டிலேயே தயாராகும் தரமான ஸ்டென்ட்களை மருத்துவர்கள் பயன்படுத்துமாறு ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்துகிறது என்றும் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மேலும் கூறினார்.

SCROLL FOR NEXT