தொடர்ந்து இரண்டாவது முறையாக மேற்குவங்க முதல்வராக இன்று பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி. இதற்கு அவர் தனது 60 வயதிலும் காட்டும் தைரியமே முக்கியக் காரணமாக சொல்லப் படுகிறது. இந்த தைரியம் மம்தா வின் மாணவப் பருவத்திலேயே வங்காளிகளுக்கு அறிமுகமானது.
காங்கிரஸை எதிர்த்து குரல் கொடுத்து வந்த அரசியல் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஒரு முறை கொல்கத்தா வந்திருந்தார். அப்போது அவருக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மம்தா, ஜெயப்பிரகாஷ் அமர்ந் திருந்த காரின் முன்பகுதி மீது தைரியமாக ஏறி நின்று போராட்டக் குரல் கொடுத்தார். மறுநாள் பத்திரிகைகளில் படத்துடன் வெளி யான இச் செய்தி, மம்தாவை சில மாதங்களில் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆக்கியது.
மற்றொரு சம்பவத்தில், மம்தா வசிக்கும் காளிகாட் பகுதியை சேர்ந்த 2 பெண்களை விசாரணை என்ற பெயரில் போலீஸார் அழைத்துச் சென்று சித்திரவதை செய்வதாக அறிந்தார். அங்கு நேரில் சென்ற மம்தா, கோபத்தின் உச்சியில் போலீஸாருடன் சட்டப் பிரிவுகளை குறிப்பிட்டு, வாக்கு வாதம் செய்தார். இதற்கு அவர் பயின்ற சட்டக்கல்வி உதவியாக இருந்தது. விளைவு, அவ்விரு பெண்களையும் மம்தாவுடன் அனுப்பி வைத்தனர் போலீஸார். இந்த நிகழ்வும் மம்தாவை மேற்கு வங்க மக்களிடையே தைரிய சாலியாக அடையாளப்படுத்தியது.
அதன் பிறகு ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் வசிக்கும் காளிகாட் பகுதியின் பெண்கள், சிறு சிறு பிரச்சினைகளுக்கும் மம்தாவை அணுகத் தொடங்கினர். கணவன் அடிக்கிறான் என்று வரும் பெண்கள், பிள்ளைகள் வெளியே தள்ளிவிட்டனர் என்று கூறும் முதியோர், கடையில் பிரச்சினை, வேலையில் பிரச்சினை என்று அனைத்து பிரச்சினைகளுக்கும் சளைக்காமல் உடனே நேரில் சென்று தீர்த்து வைப்பதை வழக்கமாகக் கொண்டார் மம்தா. இதனால் வங்காளிகள் அவரது பெயருடன் ‘தி’ சேர்த்து (வங்க மொழியில் ‘தி’ என்றால் அக்கா என்று பொருள்) ‘மம்தாதி’ என அழைக்கத் தொடங்கினர்.
இளைஞர் காங்கிரஸ் பதவிக் குப் பின், கொல்கத்தாவின் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மம்தா. 1984-ல் அவருக்கு முதல் முறையாக மக்களவை தேர்தலில் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை தோற் கடித்தார் மம்தா. 29 வயதில் செய்த இச்சாதனையால் அப்போது இந்தியாவின் இளம் எம்.பி.யாக புகழ் பெற்றார். இதன் பிறகு மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவது என்ற குறிக்கோளுடன் அரசியல் களத்தில் போராடத் தொடங்கினார்.
இதற்கிடையில் 1997-ல் காங்கிரஸில் இருந்து வெளி யேறிய மம்தா, ‘திரிணமூல் காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியை தொடங்கி, பிரதான எதிர்க்கட்சியாக முன்னேறினார். கடந்த 2011-ல் நடந்த மேற்குவங்க தேர்தலில் ஆட்சியைப் பிடித்த மம்தா, தொடர்ந்து 35 ஆண்டுகள் ஆட்சி யில் இருந்த இடதுசாரிகளை வீட்டுக்கு அனுப்பினார். தற்போது இடதுசாரிகளை எதிர்த்து 2-வது முறையாக வெற்றி பெற்றிருப்ப துடன் அவர்களை மூன்றாவது இடத்துக்கு தள்ளியுள்ளார் மம்தா.
இதுகுறித்து காளிகாட் பகுதி யில் வசிக்கும் சுமித் பட்டாச்சார்யா ‘தி இந்து’விடம் கூறும்போது, “மம்தாதிக்கு அரசியலில் கிடைத்த முன்னேற்றம் எளிதானது அல்ல. இதற்காக அவர் வாழ்க்கை முழு வதும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து கடுமையாக போராடினார். ஒரு தலைவர் எனவும் பாராமல் போலீஸார் அவர் மீது பலமுறை தடியடி நடத்தியுள்ளனர். ஒருமுறை மம்தாதியின் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிதாயிற்று. சிங்கூர் மற்றும் நந்திகிராமில் நிலம் கைய கப்படுத்துவதை தடுக்கும் போராட் டத்திலும் மம்தாதியை போலீஸார் குறிவைத்து அடித்தனர். இந்த நிலப் பிரச்சினையில் அவரது 26 நாள் உண்ணாவிரதம்தான் உச்சகட்ட போராட்டம். இதன் தொடர்ச்சியாக கிடைத்த வெற்றியால் தான் இடதுசாரிகளை மம்தாதியால் வீழ்த்த முடிந்தது” என்றார்.