இந்தியா

மோடி ஆட்சியின் 2-ம் ஆண்டு நிறைவு: கிராமத்தினருடன் கொண்டாட உ.பி. பாஜக முடிவு

ஆர்.ஷபிமுன்னா

பிரதமர் நரேந்தர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி வரும் மே 26-ம் தேதியுடன் இரு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதை கிராமத்தினருடன் சேர்ந்து கொண்டாட உ.பி. பாஜகவினர் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து தி 'இந்து' விடம் உ.பி. மாநில பாஜக செய்தி தொடர்பாளரான விஜய் பஹதூர் பாதக் கூறுகையில், ’எங்கள் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கிராமங்களில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பாஜகவினர் அங்கு சென்று கிராமவாசிகளுடன் தங்கி கொண்டாடுவார்கள். இதில் அந்த கிராமவாசிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளுக்காக அறிவித்த திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படும்’ என தெரிவித்தார்.

உ.பி. மாநில சட்டப்பேரவைக்காக அடுத்த வருடம் துவக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதை மனதில் வைத்து உ.பி.யின் கிராமவாசிகளை கவர பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த வகையில், கடந்த பிப்ரவரி -22-ல் வந்த சந்த் கவி ரவிதாஸ் ஜெயந்தியை பிரதமர் மோடி, உ.பி.யின் வாரணாசியின் அருகில் உள்ள சீர் கோவிந்த்பூர் கிராமத்தில் சென்று கொண்டாடினார்.

இதுபோல், கிராமங்களில் கிராமத்தினர் வீடுகளில் தங்கி அவர்களுடன் உணவருந்தும் வழக்கத்தை காங்கிரஸின் துணைத்தலைவர் ராகுல் காந்தி செய்து வந்தார். இதை அவர் முதன் முதலில் தன் தொகுதியான உ.பி.யின் அமேதியில் இருந்து செய்யத் துவக்கி இருந்தார்.

SCROLL FOR NEXT