காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஒரு டிரைவராக காஸியாபாத் நகரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பதாக, உத்தரப் பிரதேச மாநில போலீஸ் சான்றளித்திருக்கும் ஆவணம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப் பிரதேச மாநிலம், காஸியாபாத் அருகே இந்திராபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், வாடகை வீட்டில் குடியிருப்போர் தெரிவிக்கும் தகவல்கள் உண்மையானவையா என சரிபார்த்து போலீஸ் தரப்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த வகையில், வாடகைதாரரின் பெயர், ராகுல்காந்தி, தகப்பனார் பெயர் ராஜிவ்காந்தி, நிரந்தர முகவரி 12, துக்ளக் சாலை, புதுடெல்லி என்றும், தொழில் வீட்டு வேலைக்காரர் என்றும், திருமணமாகாதவர் என்றும் விவரங்கள் குறிப்பிட்ட ஆவணத்தை போலீஸாரர் சரிபார்த்ததாக கையெழுத்திட்டு, ‘சீல்’ வைத்துள்ளனர்.
ராகுல்காந்தியின் புகைப்படத்தின் மீது, காவல் நிலைய முத்திரை குத்தப்பட்ட இந்த சான்றிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பொய் தகவல்களுடன் போலியான ஆவணத்தை தவறாக பயன்படுத்தி விஷமிகள் பரபரப்புக்காக இதை வெளியிட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திராபுரம் காவல் ஆய்வாளர் கோரக்நாத் யாதவ் கூறுகையில், ‘‘அந்த ஆவணம் பழைய வடிவமைப்பில் உள்ளது. அது தற்போது பயன்பாட்டிலேயே இல்லை. யாரோ விஷமத்தனம் செய்திருக்கின்றனர். பிடிபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.