டெல்லி: இந்தியாவில் நேற்று (ஏப்.29) ஒரே நாளில் மின்சார பயன்பாடு 2 முறை உச்சத்திற்கு சென்றுள்ளதாக மத்திய மின்சார அமைக்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு நாடுகளில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே உள்ளது. அக்னி வெயில் இன்னும் தொடங்காத பல மாநிலங்களில் அனல் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்களில் மின் தடை அமலில் இருந்தாலும் மின்சார பயன்பாடு அதிகரித்து கொண்டுதான் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மின்சார பயன்பாடு 2 முறை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி நேற்று பிற்பகல் 2.35 மணி அளவில் இந்தியாவில் அதிகபட்சமாக 2,04,653 மெகா வாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 15 நிமிடங்கள் கழித்து பிற்பகல் 2.50 மணிக்கு 2,07,111 மெகா வாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய மின்சார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் மின்சார பயன்பாட்டில் இதுதான் உச்சம் என்றும் மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.