இந்தியா

வாரணாசி தொகுதிக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள்: மோடி, கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரச்சாரம்

ஆர்.ஷபிமுன்னா

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி யில் பிரபல அரசியல்வாதிகள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தேர்தல் பிரச் சாரத்தில் களம் இறங்க உள்ளனர்.

இங்கு மே 12 ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலும் போட்டியிடு கின்றனர். இவர்கள் இருவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல பிரபலங்கள் வாரணாசியை முற்றுகையிட உள்ளனர்.

இதுபற்றி ‘தி இந்து’விடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் தீபக் வாஜ்பாய் கூறியதாவது:

"ஆம் ஆத்மிக்கு ஆதரவாக பாலிவுட் நட்சத்திரங்களான பிரீத்தி ஜிந்தா, அர்ச்சனா பூரண் சிங், அம்ருதா ராவ், அயூப்கான், ஹர்ஷ் சாயா, ராஜ் ஜுத்சி மற்றும் இசை அமைப்பாளர்களான விஷால் தலானி, ரகுராம் என பலரும் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இவர்களில் பலர் தற்போது, லக்னோவில் எங்கள் வேட்பாளர் ஜாவித்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்’’ என்றார்.

பாஜகவின் உபி மாநில செய்தித் தொடர்பாளர் மணீஷ் சுக்லா, ‘தி இந்து'விடம் கூறுகையில், "மோடிஜிக்கு ஆதரவாக பரேஷ் ரவால், வினோத்கன்னா, ஹேம மாலினி, சத்ருகன் சின்ஹா, பிரபல இசையமைப்பாளர் பப்பி லஹரி உட்பட பலரும் வர உள்ளனர்’’ என்றார்.

காங்கிரஸின் உபி மாநில செய்தித் தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங், ‘தி இந்து'விடம் கூறு கையில், "காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அஜய் ராயிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ராகுல் வருவது உறுதி யாகி உள்ளது. தவிர, பல மத்திய அமைச்சர்கள், கட்சியின் தேசிய தலைவர்களும் வர உள்ளனர். பாலிவுட் நட்சத்திரங்களான ராஜ் பப்பர், நக்மா ஆகியோரும் வாரணாசி வர உள்ளனர்’’ என்றார்.

இவர்களுடன் சமாஜ்வாதி வேட்பாளரான கைலாஷ் சௌரசி யாவிற்காக அக்கட்சித் தலைவர் முலாயம் சிங், அவரது மகனும் உபி முதல்வருமான் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் விஜய் பிரகாஷ் ஜெய்ஸ்வாலுக்காக அதன் தலைவர் மாயாவதியும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

மோடிக்கு எதிராக

இதுதவிர, பெண்கள் சமூக அமைப்புகள், சமூகஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஜெயதி கோஷ், சேதன் பட், கும்கும் சங்காரி, ஹோமி கே. பாபா, தீபா மேத்தா உள்ளிட்டோர் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

SCROLL FOR NEXT