இந்தியா

என் இறுதி ஆண்டுகளை மருத்துவ சேவைக்காக அர்ப்பணிக்கிறேன்: ரத்தன் டாடா

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அஸாம் மாநில அரசு மற்றும் டாடா அறக்கட்டளைகள் சார்பில் கட்டப்பட்டிருக்கும் புற்றுநோய் மருத்துவமனைகளைத் திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் ரத்தன் டாடாவும் கலந்து கொண்டார்.

அஸாம் மாநிலத்தில், மாநில அரசு - ரத்தன் டாடா அறக்கட்டளைகள் சார்பில் 17 புற்றுநோய் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் கட்டி முடிக்கப்பட்ட ஏழு அதிநவீன புற்றுநோய் மருத்துவமனைகளை பிரதமர் மோடி வியாழக்கிழமை திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் பிரதமருடன் தொழிலதிபர் ரத்தன் டாடாவும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, "எனது இறுதி ஆண்டுகளை மருத்துவ சேவைக்காக அர்ப்பணிக்கிறேன். அஸாமை அனைவரும் மதிக்கும் மாநிலமாக அஸாம் அரசு மாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

அஸாம் கேன்சர் கேர் ஃபவுண்டேஷனின் கீழ், மாநிலம் முழுவதும் 17 புற்றுநோய் மருத்துவமனைகளைக் கட்டும் திட்டத்தின் முதல் கட்டமாக 10 மருத்துவமனைகளில் ஏழு மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மற்ற மூன்று மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திப்ருகர், கோக்ரஜார், பர்பேட்டா, தர்ராங், தேஜ்பூர், லக்கிம்பூர் மற்றும் ஜோர்ஹாட் ஆகிய இடங்களில் மருத்துவமனைகள் முடிக்கப்பட்டுள்ளன.

இதன் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: "அஸாமில் 7 புதிய புற்றுநோய் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில், 7 ஆண்டுகளில் ஒரு மருத்துவமனை திறக்கப்பட்டது கூட கொண்டாட வேண்டிய விஷயம். காலம் இப்போது மாறிவிட்டது. இன்னும் மூன்று புற்றுநோய் மருத்துவமனைகள் சில மாதங்களில் உங்கள் சேவைக்கு தயாராகிவிடும் என்று என்னிடம் கூறப்பட்டது. மருத்துவமனைகள் உங்கள் சேவைக்கு உள்ளன. ஆனால் இந்த புதிய மருத்துவமனைகள் காலியாக இருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்; உங்கள் ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்தார்

SCROLL FOR NEXT