இந்தியா

கர்நாடக முதல்வரை சந்திக்க வந்த பெண்ணிடம் போலீஸார் அத்துமீறல்: நடவடிக்கை கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

இரா.வினோத்

கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க வந்த தலித் பெண்ணிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அத்துமீறி தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள் போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

பெங்களூருவை அடுத்துள்ள மாகடி சாலையை சேர்ந்தவர் சவிதா (32). தலித் சமூக‌த்தை சேர்ந்த இவர், தனது பெற்றோர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கக் கோரியும், தனது வீட்டுக்கு பட்டா வழங்கக் கோரியும் நீண்ட காலமாக போராடி வருகிறார். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் இல்லத்தில் நடந்த ‘மக்கள் தரிசனம்’ நிகழ்ச்சியில் தனது கோரிக்கையை முன்வைக்க வந்தார். ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சவீதாவை தடுத்து நிறுத்தி முதல்வரை சந்திக்க விடாமல் அலைகழித்துள்ளனர்.

மேலும் ஹை கிரவுண்ட் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அவரை மிரட்டி தகாத முறையில் நடந்துகொண்டுள்ளனர். இதை வெளியே சொன்னால், விபச்சார வழக்கில் கைது செய்து சிறைக்குள் அடைத்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். எனினும் இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி, கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் போலீஸாரால் பாதிக்கப்பட்ட சவீதாவை முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவருமான குமாரசாமி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘கர்நாடகாவில் பெண்களுக்கும், தலித் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் சித்தராமையாவின் அரசு படு தோல்வி அடைந்துள்ளது. போலீஸாரின் இந்த அத்துமீறலை மதச்சார்பற்ற ஜனதா தளம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக 3 நாட்களுக்குள் சித்தராமையா நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீடு முன் போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா கூறும்போது, ‘‘முதல்வரின் இல்லத்துக்குள்ளேயே ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை. போலீஸாரை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநரான அவரது கணவரும் மிரட்டப்பட்டுள்ளார். மேலும் அவர் பிழைப்பு நடத்த ஆட்டோ வழங்க கூடாது என்றும் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சவீதாவின் கணவர் வேலை இல்லாமல் உள்ளார். அவருக்கு எனது சொந்த செலவில் ஆட்டோ வாங்கி தருவேன்’’ என்றார்.

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவும் இந்த சம்பவத் துக்கு கடும் கண்டனம் தெரிவித்து சம்பந்தப்பட்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள் ளார்.

இதையடுத்து உண்மை நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பெங்களூரு மாநகர போலீஸ் ஆணையருக்கு முதல்வர் சித்தராமையா உத்தர விட்டுள்ளார். ஆனால் போலீஸார் தரப்பில் இந்த குற்றச்சாட்டு மறுக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT