இந்தியா

இந்தியாவில் புதிதாக 2,541 பேருக்கு கரோனா தொற்று: பலி 30

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,541 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று 2,593 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்றே பாதிப்பு சற்றே குறைந்துள்ளது.

புதிதாக 2,541 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 4,30,60,086 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 16,522 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.

அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 1,083 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் 57.37% ஆகும்.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 30 பேர் பலியான நிலையில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 5,22,223 ஆக உள்ளது. அதேவேளையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,862 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக கரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,25,21,341 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனா நோயிலிருந்து குணமடைவோர் விகிதிம் 98.75% ஆக உள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 83.50 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,02,115 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா பரவல் விகிதத்தைப் பொறுத்தவரை அன்றாட பாசிட்டிவிட்டி விகிதம் 0.84% என்றளவிலும் வாராந்திர பாசிட்டிவிட்டி விகிதம் 0.54% என்றளவிலும் உள்ளது. நூறு பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதே பாசிட்டிவிட்டி விகிதமாகும்.
இதற்கிடையில் நாடு முழுவதும் 187.71 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT