இந்தியா

நீதிமன்ற உத்தரவை தவறாக மொழிபெயர்த்து மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.25,000 அபராதம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஐஏஎன்எஸ்

இந்தியில் இருந்த நீதிமன்ற உத்தரவை, ஆங்கிலத்தில் நிறைய பிழைகளுடன் மொழிபெயர்த்து மனு தாக்கல் செய்தவருக்கு உச்ச நீதிமன்றம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.

கிரிமினல் வழக்கு ஒன்றில் கீழ் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வர்த்தா ராம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தி மொழியில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வர்த்தா ராம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விடுமுறை கால உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபே மனோகர் சாப்ரே, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு தங்கள் உத்தரவில் கூறியதாவது:

இந்தியில் உள்ள நீதிமன்ற உத்தரவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததில் நிறைய இலக்கண பிழைகள் உள்ளன. வாக்கிய அமைப்பு சரியில்லை, நிறுத்தற் குறியீடுகள் (புள்ளி, கமா போன்றவை) சரியான இடத்தில் பயன்படுத்தவில்லை. மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தைகள் பொருத்தம் இல்லாமல் உள்ளன.

இந்த மனுவை படித்து புரிந்து கொள்ளவே ஒரு மணி நேரத்துக்கு மேலானது. என்ன சொல்ல வருகிறார்கள் என்றே புரியவில்லை. மிகவும் சிரமமாக இருந்தது. இதுபோன்ற ஒரு மொழிபெயர்ப்பை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. எனவே, தவறான மொழிபெயர்ப்புடன் மனு தாக்கல் செய்த மனுதாரருக்கு ரூ.25 அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த தொகை இன்றே (வெள்ளிக்கிழமை) செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அபராத தொகை அதிகரிக்கப்படும். இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை வழக்கறிஞர் ஐஸ்வர்யா நன்கு சரிபார்த்திருக்க வேண்டும். அதை செய்யாததற்கு அவர் வருந்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

வழக்கறிஞர் ஐஸ்வர்யா பட்டி கூறுகையில், ‘‘தவறான மொழிபெயர்ப்பினால் மனுவில் இலக்கண பிழைகள் ஏற்பட்டுள்ளன’’ என்று ஒப்புக் கொண்டார்.

SCROLL FOR NEXT