இந்தியா

ஹெலிகாப்டர் ஊழல் குறித்து அனல்பறக்கும் விவாதம்: அறிக்கை தாக்கல் செய்தார் மனோகர் பாரிக்கர்

பிடிஐ

சர்ச்சைக்குரிய ஹெலிகாப்டர் ஊழல் குறித்து மாநிலங்களவையில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. அப்போது, மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தார்.

மாநிலங்களவையில், பாஜக உறுப்பினர் பூபேந்திர யாதவ், ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு தொடர்பு இருப்பதாகவும் இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் மனு சிங்வி பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, “ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரத்தில், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அகமது படேல் உள்ளிட்ட எங்கள் கட்சித் தலைவர்கள் மீது மத்திய அரசு பழிசுமத்த முயற்சிக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

பின்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் பேசினர். பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியும் பேசினார். அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சோனியா காந்தியின் உத்தரவுப்படி செயல்பட்டதாகக் குற்றம்சாட்டினார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காங்கிரஸ் உறுப்பினர் அகமது படேல் பேசும்போது, “இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிருபித்தால் பொது வாழ்க்கையிலிருந்து விலக நான் தயார்” என்றார்.

பின்னர் மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் அறிக்கை சமர்ப்பித்தார். அப்போது அவர் பேசும்போது, “ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் லஞ்சம் வழங்கப்பட்டதாக இத்தாலி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, இதனால் பயனடைந்தவர்களா யார், இதற்கு உறுதுணையாக இருந்தது யார் என்று தெரிந்துகொள்ள அரசு விரும்புகிறது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது” என்றார்.

மேலும் கேள்வி ஒன்றிற்கு அவர் பதில் அளிக்கையில் அகஸ்டாவெஸ்ட் லேண்ட் காப்டர்களை வாங்க ஓய்வு ஒழிச்சலில்லாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி முயற்சி செய்துள்ளது. அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ ஆகியவற்றை கண்ணுக்குத் தெரியாத கை ஒன்று இயக்கியுள்ளது அல்லது இயக்கவிடாது செய்துள்ளது என்றார்.

இவரது அறிக்கைக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த விவாதம் காரணமாக மாநிலங்களவை 7.30 வரை செயல்பட்டது.

உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைக்க அதனை பரிக்கர் மற்றும் வெங்கய்ய நாயுடு நிராகரித்தனர், இதனை எதிர்த்து காங்கிரஸ் அவையிலிருந்து வெளியேறியது.

SCROLL FOR NEXT