ஜம்மு சுன்ஜவான் பகுதியில் நேற்று நடந்த என்கவுன்டரில் இரண்டு தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இரு தரப்பு சண்டையில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வீர மரணம் அடைந்தார். சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு படை வீர்கள் ஆய்வு செய்கின்றனர். படம்: பிடிஐ 
இந்தியா

ஜம்முவில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் - பிரதமர் மோடி பயணத்தை சீர்குலைக்க சதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜம்முவின் சுன்ஜ்வான் பகுதியில் நேற்று காலை சுட்டுக் கொல்லப் பட்ட 2 தற்கொலைப்படை தீவிரவாதிகள், பிரதமரின் ஜம்மு காஷ்மீர் பயணத்தில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என ஜம்மு காஷ்மீர் ஏடிஜிபி தில்பாக் சிங் கூறியுள்ளார்.

ஜம்மு சுன்ஜ்வான் பகுதியில் நேற்று 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தீவிரவாதிகள் என தெரியவந்துள்ளது. இது குறித்து ஜம்மு காஷ்மீர் ஏடிஜிபி தில்பாக் சிங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஜம்மு புறநகர் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகே, நேற்று அதிகாலை 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது மூலம் மிகப்பெரிய தற்கொலைப்படை தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சண்டையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்தார். பாதுகாப்பு படையினர் 9 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட் கள், 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், குண்டு வீசும் லாஞ்சர்கள், தற்கொலைப்படை தாக்குதலுக்கான உடைகள், செயற்கைகோள் தொலைபேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

ஜம்முவின் சுன்ஜ்வான் பகுதியில் உள்ள ராணுவ முகாம் நோக்கி 2 தீவிரவாதிகள் வருவதை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் கண்டுபிடித்தனர். அந்த நேரத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எப்) பஸ் ஒன்று வீரர்களுடன் ஜம்மு விமான நிலையம் நோக்கி சென்றது. அந்த நேரத்தில் 2 தீவிரவாதிகளும் பஸ் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர் மற்றும் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சரியான நேரத்தில் தகவல் கிடைத்ததால் இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது.

இரண்டு தீவிரவாதிகளும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களுக்கு உள்ளூர் மக்கள் யாரும் ஆதரவு கொடுத்தார்களா என விசாரித்து வருகிறோம். இவர்கள் பிரதமரின் ஜம்மு பயணத்தில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டியிருக்க வாய்ப்புள்ளது அல்லது சுன்ஜ்வான் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம். இவ்வாறு ஏடிஜிபி தில்பாக் சிங் கூறினார்.

பிரதமர் நாளை ஜம்மு பயணம்

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, சம்பா பகுதியில் பாலி கிராமத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்பு, எல்லை பகுதிகளை தவிர, ஜம்மு காஷ்மீரின் பிற பகுதிகளுக்கு பிரதமர் மோடி செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT