சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸின் புதிய தலைவராக அம்ரீந்தர் சிங் பிரார் என்கிற ராஜா வாரிங் (44) நேற்று பதவியேற்றார்.
முன்னாள் அமைச்சரான இவர், கிட்டர்பாகா தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பதவியேற்பு விழாவில் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சித்து கூறும்போது, “பஞ்சாபில் கடந்த 5 ஆண்டு காலத்தில் மாஃபியாக்கள் கோலோச்சினர். இதனால் தான் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சி தன்னை புதுப்பித்துக் கொள்வது அவசியம்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை எனது தம்பியாக கருதுகிறேன். மாஃபியாக்களுக்கு எதிரான போரில் அவரை நான் ஆதரிப்பேன். பகவந்த் மான் நேர்மையானவர்” என்றார்.