பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்தைத் தடுக்க எந்த அரசாலும் முடியாது. சம்பவம் நிகழ்ந்த பிறகுதான், நடவடிக்கை எடுக்க முடியும் என்று மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர் தெரிவித்த கருத் தால் பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: “பாலியல் பலாத்காரம், சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணை பொறுத்து சமூக குற்றமாக கருதப்படுகிறது. சில சமயங்களில் அது சரி என்றும், சில நேரங்களில் தவறு என்றும் கூறப்படுகிறது. புகார் தெரிவிக்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது. பலாத்காரத்தைத் தடுக்க எந்தவொரு அரசாலும் முடியாது. சம்பவம் நிகழ்ந்த பின்பு, நடவடிக்கை மட்டுமே எடுக்க முடியும்.
பலாத்காரம் செய்யப்படுவதி லிருந்து தப்பிக்க, கராத்தே, ஜுடோ உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை பெண்கள் கற்றுக்கொள்ள வேண் டும். அப்போதுதான், பெண்களின் சம்மதம் இல்லாமல், யாராலும் அவர்களைத் தொட முடியாது.
திரைப்படங்களில் காட்டப்படும் ஆபாச நடனங்கள் சமுதாயத்தில் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. 2007-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இந்தித் திரைப்பட நடிகை ஒருவரின் கன்னத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் முத்தமிட்டார். ஆனால், அந்த நடிகை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதைத் தவறு என்றும் கருதவில்லை” என்றார்.
பதவி விலகக் கோரிக்கை
பாபுலால் கவுரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அவர் உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் மானக் அகர்வால் கூறுகையில், “பலாத்காரத்தில் ஈடுபட முயற்சிப்போருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பாபுலால் கவுர் பேசியுள்ளார். அமைச்சரின் பணி, பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதானே தவிர, பலாத்காரம் செய்வோருக்கு ஆதரவாக பேசுவது அல்ல. பாபுலால் கவுர், உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.
பாஜக விளக்கம்
இதனிடையே, பாபுலால் தெரிவித்த கருத்து தொடர்பாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் லலிதா குமாரமங்கலம் கூறுகையில், “பாபுலால் கவுரின் கருத்துக்கும், கட்சிக்கும் சம்பந்தமில்லை. அது அவரின் தனிப்பட்ட கருத்து. பெண்களுக்கு பாதுகாப்பும், அதிகாரமும் அளிக்கப்படவேண்டும் என்பதே நாங்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலாகும்.
இப்பிரச்சினையின் தாக்கத்தை பாபுலால் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. மிகவும் பழமை யான கண்ணோட்டத்தில் இப் பிரச்சினையை அவர் அணுகி யுள்ளார்” என்றார்.