இந்தியா

கொல்கத்தா மேம்பால விபத்தில் பலி 24 ஆனது; மீட்புப் பணிகள் தீவிரம்

பிடிஐ

கொல்கத்தா மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் வாகனங்களை மீட்க ராணுவ வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

கொல்கத்தா காவல்துறையின் பேரிடர் மீட்புக் குழுவினரும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு முழுவதும் நடந்த மீட்புப் பணிகள் தற்போதும் தொடர்கிறது.

மீட்புப் பணிகள் குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "இடிபாடுகளுக்குள் இருந்து இதுவரை யாருமே உயிருடன் மீட்கப்படவில்லை. இரண்டு ஆட்டோக்களும் வேறு சில வாகனங்களையும் வெளியே எடுத்துள்ளோம். லாரி ஒன்று இன்னும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளது. அதில் யாரேனும் உயிருடன் மாட்டிக்கொண்டிருக்கின்றனரா என்பது தெரியவில்லை. 90-க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்" என்றார்.

கொல்கத்தாவின் கிரிஷ் பூங்கா வில் இருந்து ஹவுரா பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கி.மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த மார்க்சிஸ்ட் ஆட்சியின்போது 2008-ம் ஆண்டில் இதற்கான டெண்டர் விடப்பட்டு ஹைதராபாதை சேர்ந்த ஐ.வி.ஆர்.சி.எல். லிமிடெட் நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது.

மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த ஒப்பந்த நிறுவனத்துக்கு கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி அண்மைக்காலமாக பணிகள் வேகமாக நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் புரா பஜார் பகுதியில் சுமார் 250 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் பாலத்தின் கீழே கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. பாதசாரிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

SCROLL FOR NEXT