இந்தியா

கர்நாடகத்தைச் சேர்ந்த ஐ.எஸ். முகவர் சிரியாவில் அமெரிக்க தாக்குதலில் கொலை

ஆதித்ய கே.பரத்பாஜ்

இந்தியாவில் ஐ.எஸ்.-க்கு ஆள் சேர்த்த கர்நாடக மாநிலம் பத்கலைச் சேர்ந்த முகமது ஷபி அர்மார் சிரியாவில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து ஐ.எஸ்.-ல் இணைந்தததற்காக அண்மையில் கைது செய்யப்பட்ட 14 பேரையும் இந்த முகமது ஷபி அர்மார்தான் அந்த இயக்கத்தில் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ்.-ன் துணை அமைப்பான அன்சார்-உல்-தவ்ஹீத்துக்கு தலைமை வகித்து வந்தார்.

இந்நிலையில், ஷபி அர்மார் சிரியாவில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஐ.எஸ். அமைப்பின் வளர்ச்சியை கண்காணித்து வரும் உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "கடந்த ஞாயிறு இரவு அமெரிக்க உளவுத் துறையிடம் இருந்து எங்களுக்கு இந்த தகவல் வந்தது. இருப்பினும் களத்தில் இருக்கும் இந்திய அதிகாரிகள் மூலம் இத்தகவலை உறுதி செய்ய முயன்று வருகிறோம். முதற்கட்ட தகவலின் அடிப்படையில் முகமது ஷபி அர்மார் கொல்லப்பட்டதாகவே தெரிகிறது. ஐ.எஸ். ஆதரவு சமூக வலைதளங்களையும் கண்காணித்து வருகிறோம்" என்றார்.

யார் இந்த முகமது ஷபி அர்மார்?

முகமது ஷபி அர்மார், 2008-ல் இந்தியன் முஜாகிதீன் அமைப்பில் சேர்ந்தார். ரியாஸ் பக்தல் அவரை முஜாகிதீனில் சேர்த்தார். 2011-12 காலகட்டத்தில் அன்சார்-உல்-தவ்ஹீத் என்ற அமைப்பினை அர்மார் துவக்கினார். பாகிஸ்தானின் வடக்கு வாசரிஸ்தானில் இருந்து இந்த இயக்கம் இயங்கிவந்தது.

பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் ஷபி ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்த்து வந்தார். ஐ.எஸ்.-ல் இணைந்ததற்காக 2015-ல் மத்தியப் பிரதேசத்தில் கைதானவர்கள், 2016-ல் டெல்லி, ரூர்கேலா பகுதிகளில் கைதானவர்கள் அனைவரையும் ஷபியே ஆன்லைன் மூலம் இணைத்துள்ளார் என மத்திய புலனாய்வு குறிப்புகள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT