சென்னை: உக்ரைனில் படிப்பை தொடர முடியாமல் நாடு திரும்பிய மாணவர்களை காலியாக உள்ள இடங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், அந்நாட்டில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே, உக்ரைனில் தங்கி உயர் கல்வி படித்துவந்த இந்திய மாணவர்கள், போர் அச்சத்தால் அங்கிருந்து நாடு திரும்பினர். உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது.
இந்நிலையில், அகில இந்தியதொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் - செயலர் ராஜீவ் குமார், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
மத்திய அரசு விளக்கம்
போர் சூழல் காரணமாக உக்ரைனில் இருந்து சுமார் 20 ஆயிரம் மருத்துவ மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள், கல்வி தொடர முடியாமல் தாயகம் திரும்பியுள்ளனர். தங்களின் கல்வி பாதிக்கப்பட்டு எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால் அந்த மாணவர்கள் ஆழ்ந்த விரக்தியில் உள்ளனர். இதுசார்ந்த கேள்வி நாடாளுமன்றத்தில் எழுந்தபோது, மாணவர்களின் நலன் கருதி உள்நாட்டிலேயே கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
எனவே, இங்கே கல்வியைதொடர விரும்பும் மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை ஒதுக்கி உதவ வேண்டும்.மேலும், உக்ரைன் உயர்கல்வி நிறுவனங்களில் எந்த பாடப்பிரிவு மற்றும் கல்வியாண்டில் படித்தார்களோ அதை இங்கேயும் தொடர அனுமதிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தங்களின் கல்வி பாதிக்கப்பட்டு எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால் உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் விரக்தியில் உள்ளனர்.