இந்தியா

சித்தூர் பஸ் நிலையத்தில் 100 ரூபாய்க்கு 1 வயது குழந்தையை விற்க முயன்ற மனநிலை பாதித்த தாய்

என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலம் சித்தூர் பஸ் நிலையத்தில் ரூ. 100க்கு ஒரு வயது பெண் குழந்தையை பெற்ற தாயே விற்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சித்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தேனீர் கடையில் ஒரு வயது பெண் குழந்தையுடன் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். நீண்ட நேரமாக அங்கு வருவோர், போவோரை பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண் திடீரென ஒரு கடைக்குச் சென்று தனது குழந்தையை ரூ.100 விலை கொடுத்து வாங்கி தனது வறுமையை போக்க உதவும்படி கேட்டுக் கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீஸார், குழந்தையுடன் அந்தப் பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், இதன் காரணமாகவே பெற்ற குழந்தையையே அவர் விற்க முயன்றதும் தெரியவந்தது. பின்னர் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து குழந்தையையும் அந்தப் பெண்ணையும் போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சித்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT