பிஹாரில் கடந்த வாரம் பகுதி அளவில் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று மாநிலம் முழுவதும் அதிரடியாக பூரண மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது. இதை யடுத்து சமூக மாற்றத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதாக முதல்வர் நிதிஷ்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் மாநில முதல் வரும், ஐக்கிய ஜனதா தள தலை வருமான நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றும் வகையில் ‘மதுவிலக்கு சட்ட மசோதா 2016’ மாநில சட்டப்பேர வையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பிஹாரில் கடந்த 1-ம் தேதி முதல் கிராமப்புறங்களில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப் பட்டது. எனினும் நகர்ப்புறங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.
இந்நிலையில் கிராமப் புறங்களில் அமல்படுத்தப்பட்ட மதுவிலக்கு சட்டத்துக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்திருப்பதை அடுத்து, தற்போது நகரங்களிலும் மது விற்பனைக்கு தடை செய்யும் வகையில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த நேற்று நடந்த அமைச் சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி உடனடியாக மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது.
பின்னர் இது குறித்து செய்தியா ளர்களிடம் முதல்வர் நிதிஷ் குமார் கூறியதாவது:
பெருநகரம் மற்றும் நகரங்களில் மட்டும் மது விற்பனைக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 1-ம் தேதி பகுதி அளவில் மதுவிலக்கு அமல்படுத்தப் பட்டது.
இதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தலைநகர் பாட்னாவில் மட்டு மின்றி பிற நகரங்களில் உள்ள மக்களும் மது விலக்கு அமல் படுத்தப்பட்டதற்கு அமோக ஆதரவு தெரிவித்தனர். எனவே தான் உடனடியாக மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டுவர முடிவு செய் தோம். மேலும் உள்நாட்டில் தயாரிக் கப்படும் கள், சாராயத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. எனினும் பதநீர் விற்பனைக்கு தடை இல்லை.
பனை ஓலையில் இருந்து பாய், கூடை போன்ற எண்ணற்ற பொருட்கள் உருவாக்க முடியும். இதன் மூலம் கள், சாராயத்தில் வரும் வருவாயைவிட மாதம் ரூ.6,000 வரை பனை விவசாயிகள் ஈட்ட முடியும். இதற்காக பனை மரங்கள் அதிகம் உள்ள தமிழகத்தின் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம்.
இதற்காக தனி கமிட்டி ஒன்றும் அமைக்கப்படும். பால் விற்பனையை போல் பதநீர் வர்த்தகத்தை வலுப்படுத்தவும் கூட்டுறவு அமைப்பு உருவாக்கப்படும். இந்த பூரண மதுவிலக்கு மூலம் பிஹாரில் சமூக மாற்றத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல் ஹோட்டல்கள், கிளப் மற்றும் பார்களிலும் மதுபான விற்பனைக்கான தடை நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த தடையால் மாநிலம் முழுவதும் ஏற்கெனவே விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 36,000 லிட்டர் வெளி நாட்டு மதுபானங்கள் தேக்க மடைந்துள்ளன.