இராக்கில் உள்நாட்டுப் போர் நடக்கும் பகுதிகளில் சிக்கி யுள்ள இந்தியர்களில் மேலும் 17 பேர் பத்திரமாக வெளியேற் றப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 34 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் உள்ளூர் அதிகாரிகள் உதவியுள்ளனர்.
பாதுகாப்பு நிலவரம் மோச மாக இருப்பதால், பணம், செலவு பார்க்காமல் சந்தர்ப் பம் கிடைத்தால் தாமாகவே இராக்கை விட்டு வெளி யேற முயற்சிக்கும்படி இந்தியர்களுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவல் வருமாறு:
சண்டை நடக்கும் பகுதிகளில் இருக்கும் இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
உள்ளூர் அதிகாரிகளின் துணையுடன் மேலும் 17 பேரை போர் பகுதிகளிலிருந்து இந்தியா மீட்டுள்ளது. அவர்கள் தற்போது பாக்தாதில் இருக்கின்றனர்.
இராக்குக்கு இந்தியர்கள் பயணம் செய்வதை மறு அறிவிப்பு வெளியிடும் வரை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்துகிறோம். எர்பில், பாக்தாத், பாஸ்ரா, நஜப் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: கடத்தல்காரர்கள் பிடியில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர். வன்முறை பாதிப்புக்கு உள்ளான திக்ரித் நகர மருத்துவமனையில் உள்ள 46 நர்ஸ் பணியாளர்களுடன் அரசு தொடர்பில் உள்ளது. மருத்துவ மனையிலேயே தங்கி உள்ள அவர்களுக்கு உணவு அங்கேயே தரப்படுகிறது.
போர்ப் பகுதியில் எத்தனை இந்தியர்கள் உள்ளனர் என்பது பற்றி சரியான தகவலை கொடுக்க இயலவில்லை. இராக்கிலிருந்து வெளியேறு வதில் சட்ட நடைமுறை பிரச்சினை உள்ளவர்கள் தவிர மற்ற இந்தியர்களுக்கு உதவ இந்திய தூதரக அதிகாரிகள்- இராக் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
நஜப், கர்பாலா, பாஸ்ரா ஆகிய இடங்களில் உள்ள இந்தியர் களுக்கு உதவ முகாம் அலுவலகங் களை பாக்தாதில் உள்ள இந்திய தூதரகம் விரைவில் திறக்க உள்ளது. இவ்வாறு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ராணுவம் செல்லுமா?
இதனிடையே, இராக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்தியாவிலிருந்து படைவீரர்கள் அனுப்பி வைக்க சாத்தியம் உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்தார் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி.
இராக்கில் போர் நடக்கும் பகுதிகளில் இருந்து 16 பேர் ஏற்கெனவே மீட்கப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் பிடியிலிருந்து ஒருவர் தப்பினார். இப்போதைய நிலையில் 47 நர்ஸ் பணியாளர்கள், கடத்தல்காரர்கள் பிடியில் உள்ள 39 பேர் உள்பட மொத்தம் 103 இந்தியர்கள் போர்ப்பகுதிகளில் சிக்கி உள்ளனர்.
கேரளத்தைச் சேர்ந்தவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற் கான செலவை ஏற்க மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்றால் அந்த செலவை மாநில அரசு ஏற்கும் என கேரள சட்டப் பேரவையில் வெளிநாடு வாழ் கேரளத்தவர் நல அமைச்சர் கே.சி.ஜோசப் தெரிவித்தார்.