இந்தியா

ம.பி. தொழில் தேர்வு வாரிய ஊழலில் சிவராஜ் சிங், உமா பாரதிக்கு தொடர்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மத்தியப்பிரதேச தொழில் தேர்வு வாரிய (Madhya Pradesh Professional Examination Board) ஊழலில், அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய அமைச்சர் உமா பாரதிக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பான புகார்களும், பதில்களும் திங்கள்கிழமை இணையதளத்தின் ட்வீட் பக்கங்களில் நிறைந்துள்ளன.

முதல் ட்வீட்டாக காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் ஷக்கீல் அகமது, “ம.பி. தொழில் தேர்வு வாரிய ஊழலில் சிக்கி சிறையில் இருப்பவருக்கு, முதல்வர் சவுகான் வீட்டில் உள்ள ஒரு பெண்ணிடம் இருந்து 139 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. யார் இவர்?” எனக் கேள்வி எழுப்பினார்.

சிவராஜ் சிங் மனைவி மீது புகார்

இதைத் தொடர்ந்து அந்தப் பெண், சவுகானின் மனைவி சாதனாதான் என்று மாநில காங்கிரஸார் புகார் எழுப்பத் தொடங்கிவிட்டனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அதே நாளில் சிவராஜ்சிங் சவுகான், தான் காங்கிரஸார் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்கப் போவதாக ட்விட்டரில் எழுதியுள்ளார்.

அதில் சுவுகான், “139 முறை எனது வீட்டு எண்ணில் இருந்து தேர்வாணைய குற்றவாளிக்கு போன் பேசப்பட்டதாக கூறுகின்றனர். அந்த எண்களை வெளியிடுங்கள். அதில் ஒன்றுகூட முதல்வர் இல்ல எண்ணாக இருக்காது” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸுக்கு எச்சரிக்கை

மற்றொரு ட்வீட்டில் சவுகான், “எனது மனைவியின் ஊரான கோண்டியாவை (மகாராஷ்டிரா) சேர்ந்த 17 உறவினர்கள் தேர்வு செய்யப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் மகாராஷ்டிராவில் இருந்தும் யாரும் தேர்வு செய்யப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக காங்கிரஸாருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாகவும் சவுகான் கூறியுள்ளார்.

உமாபாரதி மீது புகார்

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா, “மத்திய அமைச்சர் உமாபாரதியும் சில மாணவர்களுக்காக போனில் பரிந்துரை செய்துள்ளார். அவரது தொலைபேசி எண்களும், குற்றவாளியின் தொலைபேசியில் வந்த அழைப்புகள் வரிசையில் உள்ளன. ஆனால் இவரிடம் இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லை” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த வழக்கில் மாநில தொழில்கல்வி அமைச்சர் லஷ்மிகாந்த் சர்மா கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். முக்கியத் தலைவர்களின் பெயர்களும் போலீஸாரின் எப்.ஐ.ஆர்.ல் இடம்பெற்றுள்ளன” என்றார்.

உமாபாரதி அறிக்கை

இதற்கு உமா வெளியிட்ட அறிக்கையில், “தேர்வு வாரிய வழக்கின் குற்றவாளிகள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் கூட தப்பக் கூடாது” என்று கூறியுள்ளார். இதற்கு முன் உமாபாரதி, “இவ்வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். பிஹாரின் கால்நடைத் தீவன ஊழல் வழக்கை விட இது பெரியது” என்று கூறியிருந்தார்.

வழக்கு விவரம்

மத்தியப் பிரதேசத்தில், பொறியியல், மருத்துவம் உள்பட பல்வேறு தொழில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தேர்வை ம.பி. தொழில் தேர்வு வாரியம் நடத்துகிறது. இதுதவிர காவல்துறை மற்றும் மாநில பொது நிறுவனங்களின் பணிக்கான நுழைவுத் தேர்வையும் இந்த வாரியம் நடத்துகிறது.

இந்நிலையில் கடந்த 2013 ஏப்ரலில் இந்தூர் நகரில் , மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான தனியார் பயிற்சி நிலைய மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் அதன் ஆசிரியர் சாகர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த சுமார் 10 ஆண்டுகளாக ம.பி. தொழில் தேர்வு வாரியத்தில் நடக்கும் முறைகேடுகள் வெளியாயின. அதைத் தொடர்ந்து மாநில சிறப்பு படை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியாக தேர்வு வாரிய தலைமை அதிகாரி பங்கஜ் திரிவேதி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, முன்னாள் டிஐஜி, மாநில ஆளுநரின் சிறப்பு உதவியாளர் உள்பட பலரும் கைதானார்கள். கடைசியாக கடந்த ஜூன் 15-ல் மாநில தொழில்கல்வி அமைச்சர் லஷ்மிகாந்த் சர்மாவும் கைது செய்யப்பட்டார்.

சிவராஜ் சிங் அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறிவரும் இந்த தேர்வு வாரிய ஊழல் வழக்கை, சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்தப் பிரச்சினையை எழுப்ப காங்கிரஸ் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT