மகாராஷ்டிர மாநிலம் நாண்டெட் தொகுதி சிவசேனா எம்எல்ஏ ஹேமந்த் பாட்டில். இவர் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து தேவகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2-ஏ.சி. பெட்டியில் பயணம் செய்தார். அவருக்கு பக்கவாட்டு பெர்த் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதை மாற்றி தனக்கு விருப்பமான வேறு பெர்த் ஒதுக்கும்படி அவர் ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ரயில்வே அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இதனால் எரிச்சலடைந்த அவர், தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து அபாய சங்கிலியை தொடர்ந்து இழுத்து, ரயிலை புறப்படவிடாமல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக பெயர் வெளி யிட விரும்பாத ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, “இரவு 9.10 மணிக்கு கிளம்பவேண்டிய தேவகிரி எக்ஸ்பிரஸ், எம்எல்ஏ-வின் அடாவடியால் 10 மணிக்குத்தான் கிளம்பியது. இதுதொடர்பாக அந்த எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பேரவைத் தலைவர் ஹரிபாகு பக்டேவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏவின் அடாவடியால் 2,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் மங்களூர், சித்தேஸ்வர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் 15 முதல் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டன” என்றார்.