இந்தியா

திருப்பதி என்கவுன்ட்டர் வழக்கில் ஓராண்டாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை

என்.மகேஷ் குமார்

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் தமிழகத்தை சேர்ந்த 20 கூலி தொழிலாளர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், ஓராண்டாகியும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி 20 தமிழர்களை செம்மரம் கடத்தியதாக ஆந்திர அதிரடிப் படையினர் சுட்டு கொன்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தமிழக அரசு, கட்சிகள், தேசிய மனித உரிமை ஆணையம் உள்ளிட்டவை இச்சம்பவத்தைக் கண்டித்தன.

என்கவுன்ட்டரில் மர்மம் உள்ள தாக ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், 5 சடலங்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

சம்பவத்தில் தொடர்புடைய சந்திரகிரி போலீஸார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளப் பட்டனர். ஆனால் இதுவரை இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. ஆந்திர அரசு சிபிஐ விசாரணைக்கு பதிலாக ‘சிட்’ எனப்படும் சிறப்பு விசாரணை குழுவை நியமித்தது. ஓராண்டு ஆகியும், இக்குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

கடந்த மார்ச் 31ம் தேதி நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற் றது. ஆனால் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படாததால், வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

ஊரிலேயே இல்லை: டிஐஜி

என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து ‘தி இந்து’ விடம் அதிரடிப்படை டிஐஜி காந்தாராவ் கூறும்போது, “சம்பவம் நடந்த அன்று நான் ஊரிலேயே இல்லை. என் மகளின் திருமண அழைப்பிதழ்களை கொடுக்க ஹைதராபாத் சென்றிருந் தேன். திருப்பதி என்கவுன்ட்டர் தகவல் எனக்கு தொலைபேசி வாயிலாகத்தான் தெரிய வந்தது.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்து, திருப்பதி திரும்பினேன். என் தொலைபேசி அழைப்பு விவரங் கள் சிறப்பு விசாரணைக் குழுவால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. எனக்கும் இந்த என் கவுன்ட்டருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்றார். அப்படியானால், என்கவுன்ட்டர் செய்யும்படி கூறியது யார்? என கேட்டதற்கு அவர் பதில் கூற மறுத்து விட்டார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பில் திருப்பதியை சேர்ந்த வழக்கறிஞர் கிராந்தி சைதன்யா வாதாடி வருகிறார். இவர் ‘ தி இந்து’ விடம் கூறியதாவது: ஓராண்டு ஆகியும் இதுவரை போலீ ஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாதது மிகவும் கண்டிக்கத் தக்கது. முதலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட போலீஸார் மீது மனித உரிமையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.

தமிழர்களை சித்ரவதை செய்வதை ஆந்திர போலீஸார் கைவிட வேண்டும். உண்மையான செம்மர கடத்தல் கும்பலை தண்டிக்க வேண்டும். இவ்வாறு சைதன்யா கூறினார்.

SCROLL FOR NEXT