பிஹாரில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு மதுவிலக்கால் அம்மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையும் எனப் புகார் எழுந்துள்ளது.
இதனால், நட்சத்திர ஓட்டல் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மது விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டது. இதற்கு மறுத்த முதல் அமைச்சர் நிதிஷ்குமார், “மது அருந்துவதற்காக சுற்றுலாவாசிகள் பிஹார் வரத் தேவையில்லை” என அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பிஹாரில் படிப்படியான மதுவிலக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு கிடைத்த பெரும் வரவேற்பால் கடந்த ஏப்ரல் 5-ல் திடீர் என முழு மதுவிலக்கும் அமல்படுத்தப்பட்டு விட்டது. இதனால், பிஹாருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தவர்கள் எண்ணிக்கையில் சரிவு ஏற்படும் எனப் புகார் எழுந்துள்ளது.
இதை குறிப்பிட்டு பிஹார் தொழில் வர்த்தக சபையின் மாநில தலைவர் பி.சி.ஷா முதல் அமைச்சர் நிதிஷுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், பிஹார் வரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்த அவர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மது விற்பனை மற்றும் அருந்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். முழு மதுவிலக்கால் பிஹார் மாநில சுற்றுலா வர்த்தகம் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் ஷா குறிப்பிட்டுள்ளார். இதை ஏற்க மறுத்த நிதிஷ், முழுமதுவிலக்கை தளர்த்த முடியாது என மறுத்துள்ளார்.
இது குறித்து பிஹாரில் நிதிஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு முன் அதனால் ஏற்படும் தாக்கங்களில் ஒவ்வொரு கோணங்களையும் நன்கு பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. முழு மதுவிலக்கு அமலினால் சுற்றுலா பாதிக்கப்படும் என்பதை ஏற்க முடியாது. ஏனெனில், பிஹாருக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாவாசிகள் ஆன்மீகவாதிகள். இவர்கள் பிஹாரின் புத்தமத சுற்றுலா தலங்களை பார்வையிடவும், இறந்த தன் உறவினர்களுக்கு பிண்ட தானம் செய்யவும் வருகிறார்கள்.
இவர்கள் பிஹாருக்கு வந்து மது அருந்த வேண்டிய அவசியமே ஏற்படாது. இதில், சிலருக்காக என ஓட்டல்களில் மதுவை விநியோகிக்க அனுமதித்தால் ஒருசாரருக்கு மட்டும் ஏன் இந்த சலுகை என பொதுமக்கள் கேள்வி எழுப்புவார்கள். இவ்வாறு ஓட்டல்களில் தங்கி யாரும் மது அருந்துவார்கள் என என்னால் கருத முடியவில்லை. இதை அனுமதிக்கத் துவங்கி விட்டால் ஓட்டல்களின் பெயர் கெட வாய்ப்புகள் உள்ளது. எனவே, மது அருந்துவதற்காக என சுற்றுலாப் பயணிகள் பிஹார் வரத் தேவையில்லை, என்றார்.
பிஹாரில் நிதிஷ் அமல்படுத்திய முழு மதுவிலக்கிற்கு நாடு முழ்வதிலும் பலத்த ஆதரவு கிடைத்து வருகிறது.