பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் மாதம் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜூன் 7, 8 தேதிகளில் அவர் அமெரிக்கா பயணப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இருப்பினும், பிரதமரின் அமெரிக்க பயண தேதிகள் முறைப்படி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள தகவலின்படி, கடல்சார் பொருளாதாரம், விண்வெளி ஆராய்ச்சியில் ஒப்பந்தம், சைபர் பாதுகாப்பு, அணுசக்தி வாணிபம் ஆகியன தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசிக்க வாய்ப்பிருக்கிறது. அதேபோல், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்கு பிரதமர் மோடி செல்ல வாய்ப்புள்ளது.
அணு உலை ஒப்பந்தம்:
பிரதமரின் அமெரிக்க பயணத்தின்போது, வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் மற்றும் என்.பி.சி. இந்தியா இடையே குஜராத் மாநிலத்தில் 6 அணு உலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் இறுதியாகும் எனத் தெரிகிறது. அண்மையில் அமெரிக்காவில் நடந்த அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்றபோதே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அப்போது கையெழுத்தாகவில்லை. எனவே, ஜூன் மாதம் பிரதமர் செல்லும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக கூடுதல் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம் குறித்து வெள்ளை மாளிகையோ அல்லது டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகமோ அதிகாரபூர்வமாக இதுவரை எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை பிரதமர் நரேந்திர மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப் பட்டால், அவர் பதவியேற்ற 2 ஆண்டுகளில் 4 முறை அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் என்ற பெருமையை பெறுவார்.