நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி "ராதை-கிருஷ்ணன்" ஒவியத்தை பரிசாக வழங்கினார். 
இந்தியா

நேபாள பிரதமருக்கு ராதை - கிருஷ்ணன் ஓவியத்தை பரிசளித்தார் பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி "ராதை-கிருஷ்ணன்" ஒவியத்தை பரிசாக வழங்கினார்.

நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். கடந்த 2-ம் தேதி அவர், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளிடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா, நேபாளம் இடையிலான ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது நேபாள பிரதமர் தேவ்பாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி "ராதை-கிருஷ்ணன்" ஒவியத்தை பரிசாக வழங்கினார். இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த கலைஞர்கள், இந்த ஓவியத்தை வரைந்துள்ளனர்.

இந்து தேச கோரிக்கை

நேபாள மக்கள் தொகையில் 81 சதவீதம் பேர் இந்துக்கள். கடந்த 2008-ம் ஆண்டு வரை நேபாளம், இந்து தேசமாக இருந்தது. சீனாவின் திரைமறைவு நடவடிக்கைகளால் நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்து தேசமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நேபாளத்தில் வலுத்து வருகிறது.

இந்த பின்னணியில் நேபாள பிரதமருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "ராதை-கிருஷ்ணன்" ஒவியத்தை பரிசாக வழங்கியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

- பிடிஐ

SCROLL FOR NEXT