மராத்வாதாவில் உள்ள அவுரங்காபாத் கடும் வறட்சியில் தத்தளிப்பதால் அப்பகுதியில் உள்ள மதுபான உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்று உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளதையடுத்து சாம்னா தலையங்கத்தில் ‘குடிநீருக்குப் பதில் பீர் அருந்துவது நம் பண்பாடல்ல’ என்று எழுதியுள்ளது.
மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பங்கஜா முண்டே, தொழிற்சாலைகளுக்கு அவர்களுக்கு அளிக்க வேண்டிய நீரின் அளவு மட்டுமே அளிக்கப்படுகிறது என்று தெரிவித்ததை மறைமுகமாக தாக்கிய சிவசேனா, மனித உயிரைக் காப்பாற்றுவதுதான் முக்கியமே தவிர, தொழிற்சாலைகளை காப்பாற்றுவது அல்ல என்று சாடியது.
இந்நிலையில் சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
மராத்வாதாவில் பீர் உற்பத்தி செய்யும் 10 பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. வறட்சி நிலைமைகளால் இந்தத் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் நீரின் அளவில் 20% குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத்தொழிற்சாலையை நம்பி ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை எனவே இதனையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால் அரசு ஒரு நடுநிலையான ஒரு தீர்வை உடனடியாக எட்ட வேண்டியது அவசியம்.
இந்தச் சூழ்நிலையில் தண்ணீர் மனித உயிரைக் காக்கவே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்த அரசு உணர வேண்டும்.
குடிநீருக்குப் பதிலாக பீர் அருந்துவது நமது பண்பாடல்ல. மேலும் வறண்ட பகுதிகளில் வாழும் மக்கள் தொகுதியினர் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை வாங்கும் அளவுக்கு பண ஆதாரம் கொண்டவர்களல்லர்.
சில பாஜக அமைச்சர்கள், பீர் உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு தடையின்றி நீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். ஆனால் மனித உயிரைக் காப்பாற்றுவதுதான் அரசின் கடமை என்று மக்கள் நினைக்கிறார்கள்.
இவ்வாறு சாம்னா தலையங்கம் தீட்டியுள்ளது.