இந்தியா

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இந்த ஆண்டில் 1.5 கோடி சமையல் எரிவாயு இணைப்பு

பிடிஐ

மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு மானியத்தை தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன்படி இதுவரை 96 லட்சம் பேர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.

இதன் மூலம் அரசுக்கு மிச்சமாகி உள்ள தொகையைப் பயன்படுத்தி வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாநில அரசுகளுடன் இணைந்து சமையல் எரிவாயு இணைப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 5 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். இந்த நிதியாண்டில் (2016-17) மட்டும் 1.5 கோடி புதிய இணைப்புகள் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்புக்காக தலா ரூ.1,600 நிதியுதவி வழங்கப்படும். இதற்காக, பட்ஜெட்டில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான பயனாளிகள் மாநில அரசுகளுடன் ஆலோசித்து தேர்ந்தெடுக்கப்படுவர்.

கிராமப் புறங்களில் பெண்கள் சமையல் செய்யும்போது புகை மூட்டத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இதனால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும். அத்துடன் பெண்களின் நேரம் மிச்சமாவதுடன், சுற்றுச்சூழல் சீர்கெடுவதும் தடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT