மதிவேந்தன் 
இந்தியா

வெளிநாடுகளுடன் மருத்துவ சுற்றுலா ஒப்பந்தம் செய்ய தயார்: வங்கதேச சுதந்திர தின விழாவில் தமிழக அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

ஆர்.ஷபிமுன்னா

சென்னை: வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் மருத்துவச் சுற்றுலா ஒப்பந்தங்கள் செய்துகொள்ள தமிழகம் தயாராக உள்ளது என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கூறினார்.

இந்தியா - வங்கதேசம் இடையே மொழி, கலாச்சாரம் என பல வகையிலும் நெருங்கியத் தொடர்பு உள்ளது. வங்கதேசத்தின் துணைத் தூதரகம் தென்னிந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கப்பட்டது. இதன் சார்பில் அந்நாட்டின் 51-வது சுதந்திர தின விழா முதன்முறையாக நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

இதன் வரவேற்பு நிகழ்ச்சி முக்கிய விருந்தினர்களுடன் நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் கலந்துகொண்டார். சென்னை, வேலூர் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு பல லட்சம் வங்கதேசத்தினர் சிகிச்சைக்காக

வந்து செல்கின்றனர். இதைப் பயன்படுத்தி தமிழக சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு திட்டமிடல் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் மதிவேந்தனுடன் வங்கதேச துணைத் தூதரகதலைமை அதிகாரி ஷெல்லி சல்ஹி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அமைச்சர் மா.மதிவேந்தன் கூறும்போது, “வங்கதேசத்தின் வரலாற்று சிறப்புமிக்க பல இடங்களுக்கு அதன் துணைத் தூதரகம் சார்பில் எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்திலிருந்து ஏராளமானோர் தமிழகத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தமிழகத்தில் வங்கதேச மருத்துவச் சுற்றுலா வர்த்தகத்தை எப்படி வளர்ப்பது என ஆலோசனை செய்வோம். இதற்காக, வங்கதேசத்தின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு எங்கள் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பேசுவோம்.

தமிழகத்தின் சுற்றுலாத்துறையில் பங்குபெற தனியார் பலரும் ஆர்வமாக உள்ளனர். இதற்காக பல தனியார் நிறுவனங்களும் பல்வேறு வகை திட்டங்களுடன் எங்களை அணுகியுள்ளனர். இதுபோன்றவர்களை அவர்களுக்கு இடையிலும் சுற்றுலா வர்த்தகங்கள் செய்துகொள்ள தமிழக அரசுஇயன்ற உதவிகளை செய்யும்” என்றார். இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழகம் அண்டை நாட்டுடன் நேரடியாக ஒப்பந்தங்கள் போட முடியுமா? இதற்கு மத்தியஅரசுடன் ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லையா? என்ற கேள்விக்கும் அமைச்சர் பதிலளித்தார்.

இதுகுறித்து அமைச்சர் மதிவேந்தன் கூறும்போது, “சுற்றுலாத் துறையை பொறுத்தவரை சிறிய வகை திட்டங்களுக்கான ஒப்பந்தம் மட்டுமே போடப்படுகிறது. இவை பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தங்கள் அல்ல. மேலும் வெளிநாடுகளுடன் பேசும்போது ‘இந்திய அரசு’ எனும் பேனரில் தான் பேசுவோம். இந்தவகையில் தான் சமீபத்தில் மெக்ஸிகோவின் லியானில் நடைபெற்ற பலூன் திருவிழாவுக்கு சென்று வந்தோம்.

மெக்ஸிகோவில் இந்தியா சார்பில் ஒரே மாநிலமாக தமிழகம் கலந்துகொண்டது. இதுபோன்ற நடவடிக்கைகளை தாராளமாக எந்த மாநிலமும் செய்யலாம். இதை எந்த மாநிலம் செய்தாலும் அதை இந்திய அரசு செய்வதாகத் தான் கொள்ள முடியும். இதில், என்னுடன் எங்கள் துறையின் முதன்மைச்செயலாளர் மற்றும் இயக்குநர் கலந்துகொண்டனர். அங்கு இந்தியா சார்பில் பறந்த பலூன் தமிழகத்தினுடையது. இதில், இந்திய அரசு எனக் குறிப்பிட்டு நமது தேசியக் கொடி இடம்பெற்றிருந்தது. இதன் கீழ் தமிழகம் எனும் குறிப்பும் இருந்தது” என விளக்கமளித்தார்.

தென்னிந்தியாவின் வங்கதேசதுணைத் தூதரக ஆணையர் அலுவலகம் சார்பில் சென்னையின் முதல் நிகழ்ச்சியாக இந்தவரவேற்பு இருந்தது. இதில், சென்னையிலுள்ள பிற நாட்டு துணைத்தூதரகங்களின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்திய வெளியுறவுத்துறை துணை அலுவலகத்தின் இயக்குநரான ஐஎப்எஸ் அதிகாரி எம்.வெங்கடாசலம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் எஸ்கவுரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT