டெல்லியில் காற்று மாசுபாடு அடைவதைத் தடுக்க முதல்வர் கேஜ்ரிவால் அரசு கொண்டு வந்த வாகனக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீண்டும் அமல் செய்யப்பட்டது. இதனையடுத்து விதிமீறல் செய்த 511 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதாவது கார்களின் எண்ணிக்கை பெருகிவருவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும், முக்கியமாக சுற்றுச்சூழல் நன்மை கருதி ஒற்றைப்படை பதிவு எண் கொண்ட கார்கள் ஒருநாளும், இரட்டைப்படை பதிவு எண் கொண்ட கார்கள் ஒருநாளும் மாறிமாறி இயங்க விதிசெய்யப்பட்டது.
இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் இந்த விதிமுறைகள் அமல் செய்யப்பட்டன. இந்தக் கட்டுப்பாடுகள் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை அமலில் இருக்கும்.
இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சுமார் 511 பேர் விதிமுறைகளை மீறி கார்களை ஓட்டி வந்ததில் அபராதம் விதிக்கப்பட்டனர்.
வாகனக் கட்டுப்பாட்டு விதிகளைக் கண்காணிக்க டெல்லி நகரம் முழுதும் போலீஸ் ரோந்துப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தை மீண்டும் அமல் செய்வதையடுத்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், போக்குவரத்து அமைச்சர் கோபால் ராய் ஆகியோர் இதற்கு டெல்லிவாசிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ட்விட்டரில் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.