திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு சர்வ தரிசனம் டிக்கெட் வாங்க, நேற்று அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள். 
இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 29-ம் தேதி பிரேக் தரிசனம் ரத்து

என்.மகேஷ்குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், உகாதிபண்டிகை, ஆனிவார ஆஸ்தானம்,பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்டஏகாதசி போன்ற விசேஷ நாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க் கிழமை, கோயில் முழுவதும் பன்னீர், சந்தனம், மஞ்சள், குங்குமம், துளசி, தவனம் போன்ற வாசனை திரவியங்களால் கற்ப கிரகம் உட்பட உப சன்னதிகள், பலிபீடம், கொடிக் கம்பம், விமான கோபுரம், முகப்பு கோபுர வாசல் என அனைத்து இடங்களும் சுத்தம் செய்யப்படும். இதுவே ‘கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்’ என்றழைக்கப்படுகிறது.

அதன்படி ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி திருநாள் வருவதையொட்டி, அதற்கு முந்தைய செவ்வாய்க் கிழமையான இம்மாதம் 29-ம் தேதி கோயிலை சுத்தப்படுத்த உள்ளனர். அன்றைய தினம், காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்பின்னர், நைவேத்தியம் படைக்கப்பட்ட பின்னர், மதியம் 12 மணிக்குமேல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதனால் அன்றைய தினம், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை சேவை ஆகியவை ஏகாந்தமாக நடைபெறும்.

இதன் காரணமாக 29-ம் தேதி காலை விஐபி பிரேக் தரிசனமும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சனிக்கிழமை என்பதால் நேற்று அதிகாலை முதலே திருமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

SCROLL FOR NEXT