டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் 5 பேருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் தொடர்பாக அருண் ஜேட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த காலக்கட்டம் பற்றி கடும் சர்ச்சைகள் எழுந்ததையடுத்து ஆம் ஆத்மி கட்சியினர் அவர் மீது அடுக்கடுக்காக குற்றங்களைச் சுமத்தினர்.
இதில் எள்ளளவும் உண்மையில்லை, ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கோரி அருண் ஜேட்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் அஷுடோஷ், விஸ்வாஸ் ராகவ் சத்தா, சஞ்சய் சிங், தீபக் பாஜ்பாய் ஆகியோருக்கு எதிராக பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் மார்ச் 9 கோர்ட் உத்தரவின் படி அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் இன்று ஆஜராகினர். இவர்களுக்கு ரூ.20,000 தொகையில் சொந்தப்பிணையில் விடுவித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
மேலும் அடுத்தகட்ட விசாரணைகளை மே 19-ம் தேதிக்கு தள்ளி வைத்தது நீதிமன்றம்.