பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி என்ன என்பதை பொதுமக்களுக்கு அறிவியுங்கள் என்று மத்திய தகவல் ஆணையத்தை (சிஐசி) டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தகவல் ஆணையர் எம்.ஸ்ரீதர் ஆச்சரியலூ என்பவருக்கு கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தில், “பிரதமர் நரேந்திர மோடி எந்த வித பட்டப்படிப்பும் படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. நாட்டு மக்கள் இது குறித்த உண்மையை அறிய விரும்புகின்றனர்.
இப்படியிருக்கையில், அவரது கல்வித்தகுதி குறித்த ஆவணபூர்வ தகவல்கள் உங்களிடம் இருக்கும் போது கூட அதனை தெரிவிக்க மறுக்கிறீர்கள். ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? இது தவறு.
என் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளிப்படுத்த விரும்புகிறீர்கள், ஆனால் அதற்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி பற்றிய தகவல்களை நீங்கள் மறைப்பது குறித்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
இதனால் தகவல் ஆணையத்தின் நடுவு நிலைமை குறித்த சந்தேகம்தான் மக்களிடையே ஏற்படும்.
என் சம்பந்தப்பட்ட ஆவணங்களை வெளியிட தைரியம் படைத்த நீங்கள் பிரதமரின் கல்வித்தகுதி குறித்த தகவல்களை அதே தைரியத்துடன் வெளியிடுமாறு உங்களை நான் வலியுறுத்துகிறேன்” என்று எழுதியுள்ளார் கேஜ்ரிவால்.