இந்தியா

டெல்லியில் வெள்ளி முதல் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு: 2-வது முறையாக 15 நாள் சோதனை

ஆர்.ஷபிமுன்னா

டெல்லியில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு அமலாக்கப்பட உள்ளது. சோதனை முறையில் இரண்டாம் தடவையான இது ஏப்ரல் 15 முதல் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மாசுக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு டெல்லியின் சாலைகளில் வாகனக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. இங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அரசால் கடந்த ஜனவரி 1 முதல் 15 தினங்களுக்கு சோதனை முறையில் முதன் முறையாக அமல்படுத்தப்பட்டது.

இதன்படி, ஒற்றை எண் கொண்ட தேதிகளில் அதேவகையான எண்கள் கொண்ட வாகனங்களும், இரட்டைப்படை தேதிகளில் அதே எண்களால் முடியும் வாகனங்களும் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால், எதிர்பார்த்த அளவுக்கு மாசுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. எனினும், போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதனால், இதை நிரந்தரமாக கொண்டு வர வேண்டும் என டெல்லி மக்களிடம் ஆதரவு பெருகியது. இதற்காக, இணையதளம், ஈமெயில், போன், மிஸ்டு கால் மற்றும் நேரில் என பொதுமக்களிடம் டெல்லி அரசு கருத்து கேட்பு நடத்தியது. இதில், கலந்து கொண்ட 90 சதவிகித டெல்லிவாசிகள் வாகனங்களுக்கான கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவர ஆதரவளித்தனர். எனவே, கடந்த முறையை விட சில மாறுதல்கள் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை காலை முதல் 15 தினங்களுக்காக வாகனக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது.

30 வகையினருக்கு விலக்கு

இரண்டாவது முறையிலும் மின்சாரம் மற்றும் சி.என்.ஜியில் ஓடுபவை, பெண் ஓட்டுநர்கள் கொண்ட வாகனங்கள் ஆகியவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறையை போல், மற்ற மாநில முதல்வரின் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ், ராணுவம், பாதுகாப்பு படையினர் மற்றும் வெளிநாடுகளில் தூதரக வாகனங்களுக்கும் கடந்த முறையை போல் விலக்களிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சீருடைகளுடன் பள்ளிகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு முதல் முறையாக விலக்களிக்கப்பட்டுள்ளது.கடந்தமுறையை விட 5 அதிகமாக மொத்தம் 30 வகை வாகனங்கள் விலக்கு பட்டியலில் இந்தமுறை இடம் பெற்றுள்ளன.

56 லட்சம் வாகனங்ளுக்கு தடை இல்லை

டெல்லியின் போக்குவரத்து துறையில் சுமார் 80 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 56 லட்சம் இருசக்கர வாகனங்கள் ஆகும். இவைகள் டீசல் மற்றும் லாரிகளுக்கு அடுத்தபடியாக இருசக்கர வாகனங்கள் மாசுக்களை 31 சதவிகிதம் உண்டாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும், 56 லட்சம் இருசக்கர வாகனங்களுக்கு தடை இல்லை என்பதால் மாசுக்கள் எதிர்பார்த்த அளவில் கட்டுப்படுத்த இயலாது என கருதப்படுகிறது. ஆய்வுகளின்படி, கார்கள் 20 சதவிகித மாசுக்களை மட்டுமே உருவாக்குகின்றன.

வாகனக் கட்டுப்பாட்டை நிரந்தரமாக்க திட்டம்

இது குறித்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறுகையில், ‘இந்தமுறை கிடைக்கும் பலனை பொறுத்து டெல்லியில் ஒவ்வொரு மாதமும் 15 தினங்களுக்கு வாகனக் கட்டுப்பாடு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். கடந்த முறை சோதனை முறையினால் டீசல் விற்பனை 40 சதவிகிதம் குறைந்துள்ளது. இதில் வரும் சிரமங்களை தவிர்க்க தம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் வாகங்களை இருவரும் மாறி, மாற்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என கோரியுள்ளார்.

பணியில் முன்னாள் ராணுவத்தினர்

காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் அமலில் இருக்கு வாகனக் கட்டுபாட்டை மீறுபவர்களுக்கு ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட உள்ளது. இவர்களை கண்காணிக்கும் பொருட்டு முன்னாள் ராணுவத்தினர் சுமார் 400 பேர் பணியில் ஈடுபடத்தப்படவும் உள்ளனர். இவர்களுடன் இணைந்து டெல்லியின் போக்குவரத்து கட்டுப்பாடுத்துறையின் 120 குழுக்கள் டெல்லி சாலைகளில் கண்காணிப்பில் ஈடுபட உள்ளது.

மெட்ரோ ரயிலில் கூடுதல் பயண முறை

வாகன கட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படக்கூடாது என்பதற்காக மெட்ரோ ரயிலில் கூடுதல் வசதிகள் செய்யப்படுகின்றன. மெட்ரோ ரயிலில் 3248 பயண முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், மெட்ரோ ரயிலில் கூடுதலாக 30 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஞாயிறு அன்று வாகனக் கட்டுப்பாடு இல்லை

அரசு விடுமுறை நாட்களில் வாகனக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை அன்று வாகனக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படாது.

SCROLL FOR NEXT