இந்தியா

வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்தேனா? - கேரள முதல்வர் உம்மன் சாண்டி மறுப்பு

செய்திப்பிரிவு

கேரள முதல்வர் உம்மன் சாண்டி கொடுத்த நெருக்கடி காரணமாகவே ஊழல் கறைபடிந்த அமைச்சர்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சி மேலிடம் மீண்டும் வாய்ப்பு அளித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை முதல்வர் உம்மன் சாண்டி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கேரளாவில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சுங்க அமைச்சர் கே.பாபு, வருமான வரித்துறை அமைச்சர் அடூர் பிரகாஷ், கலாச்சாரத் துறை அமைச்சர் கே.சி.ஜோசப், பென்னி பெஹானன், ஏ.டி.ஜார்ஜ் ஆகியோருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கக் கூடாது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் வி.எம்.சுதீரன் அண்மையில் கட்சி மேலிடத்தை கேட்டுக் கொண்டார்.

தனக்கு நெருக்கமானவர் களுக்கு எதிராக சுதீரன் காய் நகர்த்தியதால் அதிருப்தி அடைந்த முதல்வர் உம்மன் சாண்டி இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் தேர்தலில் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், தானும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என உம்மன் சாண்டி அறிவித்ததாக கடந்தவாரம் செய்திகள் வெளியாகின.

இதனால் கேரள காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த சூழலில் சமீபத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் பென்னி பெஹானனை தவிர மற்ற அனைவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கட்சி மேலிடத்துக்கு உம்மன் சாண்டி கொடுத்த நெருக்கடியே இதற்கு காரணம் என தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை உம்மன் சாண்டி நேற்று திட்டவட்டமாக மறுத்தார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘ஒரு நேர்மையான காங்கிரஸ்காரனாக, கட்சி மேலிடத்தின் உத்தரவுகளை தொடர்ந்து மதித்து வருகிறேன். மக்களின் நலனை கருத்தில் கொண்டே மேலிடத் தலைவர்கள் முடிவு எடுக்கின்றனர். இதில் எனது தலையீடு என்றும் இருந்ததில்லை. கட்சி மேலிடத்துக்கு சவால் விடுக்கும் வகையிலும் ஒருபோதும் நான் செயல்பட்டதில்லை. இது முற்றிலும் தவறான செய்தியாகும்’’ என்றார்.

கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

SCROLL FOR NEXT