சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. கடந்த ஜூன் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கை, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வாராய் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கர்நாடக அரசு, திமுக, சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதா தரப்பின் எதிர் மனுக்கள், பதில் மனுக்கள், திருத்தப்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் கடந்த டிசம்பரில் நிறைவடைந்தன.
இவ்வழக்கை, வாரம்தோறும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து முதலில் கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பி.வி. ஆச்சார்யா
ஆகியோர் 10 நாட்கள் இறுதி வாதம் செய்தனர்.
இதையடுத்து வழக்கின் முதல் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமி ஒரு மணி நேரத்துக்குள் இறுதிவாதத்தை முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவரோ அரை மணி நேரத்தில் தனது வாதத்தை முடித்தார். திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா வாதிட முற்பட்டபோது, “வழக்கை விரைவாக முடிக்க வேண்டும். கர்நாடக அரசு ஏற்கெனவே விரிவாக வாதிட்டுள்ளதால், நீங்கள் என்ன புதிதாக வாதிட போகிறீர்கள்? ஏதேனும் புதிதாக தெரிவிக்க விரும்பினால் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுங்கள்''என உச்சநீதிமன்றம் வேகம் காட்டியது. இந்த வேகம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து ஜெயலலிதா தரப்பு மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் தனது இறுதி வாதத்தை தொடங்கினார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 25 நாட்களும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 12 நாட்களும் ஜெயலலிதா தரப்பு வாதிட்டது. எனினும் உச்ச நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று, மேல்முறையீட்டில் சுமார் 12 மணி நேரத்தில் இறுதி வாதத்தை முடித்துக்கொண்டது.
வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் வருகிற 19-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அன்று சசிகலாவின் வழக்கறிஞர் சேகர் நாப்டே தனது வாதத்தை தொடங்குவார். மறுநாள் 20-ம் தேதி மஹாவீர் ஜெயந்தி விடுமுறை வருவதால், வழக்கு மீண்டும் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படும் என தெரிகிறது.
ஏப்ரல் இறுதி வாரத்தில் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கினால் சசிகலா தரப்பில் குறைந்தபட்சம் 3 நாட்கள் வாதிடுவார்கள். இதே வரிசையில் மே முதல் வாரத்தில் சுதாகரன் தரப்பில் மூன்று நாட்களும் 2-ம் வாரத்தில் இளவரசி தரப்பில் மூன்று நாட்களும் இறுதி வாதம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கடுத்து கர்நாடக அரசுத்தரப்பும் ஜெயலலிதா தரப்பும் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது.
இதுமட்டுமில்லாமல் சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள 6 தனியார் நிறுவனங்கள் தரப்பு வாதமும் அதற்கு கர்நாடக அரசு தரப்பின் எதிர் வாதமும் நடைபெறும். இதற்கு குறைந்தபட்சம் ஒரு வார கால அவகாசம் தேவைப்படலாம். இவையெல்லாம் முடிந்த பிறகு கர்நாடக அரசுத் தரப்பும் ஜெயலலிதா தரப்பும் இறுதியாக தொகுப்பு வாதம் புரிய ஓரிரு நாட்கள் அவகாசம் கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் மே மாதம் 14-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 29-ம் தேதி வரை 45 நாட்கள் உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது வழக்கறிஞர் பண்டிட் பரமானந்த் கட்டாராவின் மனு (ஜெயலலிதா வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்தது தொடர்பானது) 6 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டதைப் போல, இந்த மேல்முறையீட்டு வழக்கும் ஒத்தி வைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் தீர்ப்பு வெளியானால் சட்டப்பேரவை தேர்தல் முடிவை வெகுவாக பாதிக்கும். ஒருவேளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மே மாதம் 16-ம் தேதிக்கு முன்பாக தீர்ப்பு வெளியானால் தங்களுக்கு சாதகமாக அமையும் என எதிர்க்கட்சியினர் கணக்கு போடுகின்றனர்.
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் விசாரணைப் போக்கை வைத்து பார்க்கும்போது, அனைத்து விசாரணையும் மே 14-ம் தேதிக்குள் முடிவடைந்தாலும் தீர்ப்பு அறிவிக்க நீதிபதிகளுக்கு ஒரு மாதம் வரை அவகாசம் தேவைப்படலாம்.