அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலியாயினர்.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தவாங் பகுதியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தமலா பகுதியில் கட்டுமானத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இடம் இந்திய - சீன எல்லையில் உள்ளது.
இதில் 16 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து இறந்தனர். அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணும் பணி நடக்கிறது. மேலும் பலரை காணவில்லை. நிலச்சரிவில் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவால் நியூ லெப்ராங் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் பல கட்டிடங்களும் சேதம் அடைந்துள்ளன. கன மழை தொடர்ந்து நீடிப்பதால் பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
நிலச்சரிவில் தொழிலாளர்கள் பலியானதற்கு, பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.