இந்தியா

பருவமழை பொய்த்து போனதால் நாடு முழுவதும் 2.55 லட்சம் கிராமங்களில் கடும் வறட்சி: 25% பேர் பாதித்துள்ளதாக மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

பருவ மழை பொய்த்துப் போனதால் வறட்சி காரணமாக நாடு முழுவதும் 25 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வறட்சியை சமாளிக்க பாதிக்கப்பட்ட மாநிலங் களுக்கு கூடுதல் நிதி வழங்கப் பட்டிருப்பதாகவும் தெரிவித் துள்ளது.

உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா, தெலங் கானா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, ஜார்க்கண்ட், பிஹார், ஹரியாணா, சத்தீஸ்கர் ஆகிய 12 மாநிலங்கள் கடும் வறட்சியை சந்தித்து வருவதாக ஸ்வராஜ் அபியான் என்ற தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் வறட்சி பாதித்த இந்த 12 மாநிலங்களிலும் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், உணவு பாதுகாப்பு உள் ளிட்ட சமூக நலன் சார்ந்த சட்டங் களை மாநில அரசுகள் முறையாக பின்பற்றவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோக்கூர் மற்றும் என்.வி.ரமணா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா, வறட்சி தொடர்பான அறிக்கையை நீதிபதிகள் முன் தாக்கல் செய்தார். அதில் 254 மாவட்டங்களில் 2.55 லட்சம் கிராமங் கள் வறட்சியின் பிடியில் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட் டிருந்தது. எனினும் குஜராத் மாநிலம் குறித்து அந்த அறிக்கையில் எந்த தகவலும் சுட்டிக்காட்டப் படவில்லை. இதனால் ஆச்சரியம் அடைந்த நீதிபதிகள், ‘‘அந்த மாநி லத்துக்கு ஏதேனும் சிறப்பு திட் டங்கள் செயல்படுத்தப்படுகிறதா?’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா, ‘‘குஜராத் தவறுதலாக விடுபட்டு விட்டது. இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. அம்மாநிலத்தின் வறட்சி நிலை குறித்தும் நீதிமன்றம் முன் அறிக்கை தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

இது தொடர்பாக அந்த அறிக் கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தேவை யான பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 10 மாநிலங்களுக்கு ஏற்கெனவே ரூ.12,230 கோடி நிதி வழங்கப் பட்டிருந்தது. போதாகுறைக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.7,321 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. 21 லட்சத்துக் கும் அதிகமான குடும்பங்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வறட்சியை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு தேவையான நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிராவில் குடிநீர் பற்றாக் குறை ஏற்பட்டதால் ரயில்கள் மூலம் குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு விவசாயிகளுக்கு தேவையான கடன் உதவிகளும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் மொத்தம் உள்ள 678 மாவட்டங்களில் 254 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் உத்தரப் பிரதேசம் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 50 மாவட்டங்களில் போதிய அளவுக்கு மழை பெய்யாத காரணத்தினால் 9.88 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் பிஹார் மற்றும் ஹரியாணா மாநில அரசுகள் வறட்சி பாதிப்பு குறித்து மத்திய அரசிடம் எந்த தகவலையும் தெரிவிக்க வில்லை. வறட்சியால் பாதிக்கப் பட்ட மாநிலங்களாகவும் அறிவிக்க வில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கைகள் கட்டப் பட்டுவிட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT