நாடாளுமன்ற நெறிமுறைக்குழுவால் விசாரிக்கப்பட்டு வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதை அக்குழுவின் தலைவர் எல்.கே.அத்வானி விளக்கம் கேட்டு அனுப்பி உள்ளார்.
போலியாக உருவாக்கப்பட்ட தனியார் நிறுவனம் சார்பில் 'நாரதா' எனும் புலனாய்வு செய்தி இணையதளம் ஒரு 'ஸ்டிங் ஆப்ரேஷன்' நடத்தியது. இதில், மேற்கு வங்காள முதல்வரான மம்தா பானர்ஜியின் கட்சி எம்பிக்கள் 5 பேர் சிக்கினர். நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் மீது நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் கடந்த மார்ச் 16-ல் எல்.கே.அத்வானி தலைமையிலான நெறிமுறைகள் குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதன் சார்பில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களான சவுகதா ராய், சுல்தான் அகமது, சுபிந்தா அதிகாரி, ககோலி கோஷ் தஸ்திதார் மற்றும் பஷுண் பானர்ஜி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, தனக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸை ஏற்று நாரதா இணையதள செய்தி ஆசிரியர் சாமுவேல் மாத்யூ நேரில் ஆஜராகி இருந்தார். அதில் தம் செய்தியாளர்கள் பதிவு செய்த டேப் ஆதாரத்தை நெறிமுறைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தார். இதன் உண்மைத்தன்மை சோதனை செய்யப்பட்ட பின் இந்த நோட்டீஸ் அனுப்ப நெறிமுறைக்குழுவின் தலைவர் அத்வானியால் அனுப்பப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், தமக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் குறித்த செய்தியை திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இத்துடன் அவர்கள் நோட்டீஸ் அனுப்பப்பட்ட செய்தி உள்நோக்கத்துடன் வெளியில் கசிய விட்டிருப்பதாகவும், இதனால் அதற்கான பதிலை அளிப்பதா? வேண்டாமா? என்பது விளக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதன் பதவிக்காலம் நிறைவு பெற்று அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது.