ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில்(ஜேஎன்யூ) நடந்த ஒரு சம்பவத்தில் போலி வீடியோ பதிவை வெளியிட்டதாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு இந்தி மற்றும் ஒரு ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் மீது டெல்லி அரசு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை அடைந்த அப்சல் குருவின் நினைவு தினம் கடந்த பிப்ரவரி 9-ல் ஜேஎன்யூவில் அனுசரிக்கப்பட்டது. இதில் தேசவிரோத கோஷம் எழுப்பப்பட்டதாக ஜேஎன்யூவின் மாணவர் சங்கத் தலைவர் கன்னைய்யா குமார், துணைத்தலைவர் அனிரோத் பட்டாச்சார்யா மற்றும் உமர் காலீத் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கன்னைய்யா உட்பட மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை ஒட்டி பல நாட்களுக்காக பல்கலையில் அமளி ஏற்பட்டதுடன் இதன் தாக்கம், தேசிய அரசியலிலும் இருந்தது. இதற்கு அதே நாள் மாலை சில தொலைக்காட்சி செய்து சேனல்களில் வெளியான வீடியோ பதிவு காரணமாக இருந்தது. இவை பிறகு போலியானது எனவும், ஜோடிக்கப்பட்டவை என்றும் புகார்கள் கிளம்பின. இதன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தொலைக்காட்சியில் வெளியான விடீயோ பதிவுகளை பரிசோதனை செய்த டெல்லி போலீஸார் அவை,
ஜோடிக்கப்பட்டவை என்றும் கண்டுபிடித்துள்ளது. எனவே, இதன் மீது 226 பக்கப் புகாரை பாட்டியாலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன் மீது மூன்று செய்தி தொலைகாட்சிகள் மீது தொலைதொடர்பு தகவல் சட்டத்தின்படி கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் நளை திங்கள் கிழமை டெல்லியின் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேஎன்யூ சம்பவத்திற்கு பின் அந்த வழக்கில் சிக்கிய கன்னைய்யா நீதிமன்றம் வளாகம் உட்படப் பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டார். இதை செய்தவர்கள் தாம் செய்தி தொலைகாட்சி சேனல்களை பார்த்து கோபப்பட்டதாகக் கூறி இருந்தனர்.
இதில் ஒரு சேனல் சார்பில் ஜேஎன்யூ சம்பவத்தை வீடியோ எடுத்து செய்தியாக்கிய செய்தியாளர் கடந்த மாதம் ராஜினாமா செய்திருந்தார். இதற்கு அவர் தாம் எடுத்த வீடியோ ஜோடிக்கப்பட்டிருப்பதாகவும், இதை எதிர்த்து தாம் ராஜினாமா செய்வதாகவும் தன் முகநூல் பக்கத்தில் அக்கடிதத்தை பதிவேற்றம் செய்திருந்தார்.