இராக்கின் மொசூல் நகரில் சன்னி முஸ்லிம் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் 39 பேரை பத்திரமாக மீட்பதற்கு, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இதற்காக இராக்கில் உள்ள இன்டெர்நேஷனல் ரெட் கிரசென்ட் அமைப்பு, அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் உதவ முன்வந்துள்ள அனைவரிடமும் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொசூல் நகரில் 40 தொழிலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டனர். இதில் ஒருவர் தப்பிவந்து, இதுகுறித்த தகவல்களை இந்திய அதிகாரி களுடன் பகிர்ந்துகொண்டார். இந்நிலையில் கடத்திச் சென்றவர் கள் குறித்த விவரங்கள் தெரியவந்திருப்பதாக இந்திய அதிகாரிகள் சனிக்கிழமை கூறினர்.
இதனிடையே திக்ரித் நகர மருத்துவமனையில் சிக்கியுள்ள 46 இந்திய செவிலியர்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ள தாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இராக் அதிகாரிகள் தவிர, இராக்கில் செயல்படும் ஐ.நா. குழுவினர், பல்வேறு தன்னார்வ அமைப்பினர், அந்த பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் உதவியை இந்தியா ஏற்கெனவே கோரியுள்ளது. இராக்கில் சண்டை நடைபெறும் பகுதியில் சிக்கிக்கொண்ட 120 இந்தியர்களில் 16 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஒருவர் கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருந்து தப்பிவந்துள்ளார். இன்னும் 103 பேர் அங்கு சிக்கியுள்ளனர். இதில் திக்ரிக் நகரில் உள்ள 46 செவிலியர்களும், கடத்தல்காரர்கள் பிடியில் உள்ள 39 தொழிலாளர்களும் அடங்குவர்.