புதுடெல்லி: சமீபத்தில் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை இழிவுபடுத்தி பிரச்சாரம் செய்ய சதி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. இப்படம் விமர்சக ரீதியாக பாராட்டப்பட்டு வருகிறது.
80-களின் பிற்பகுதியிலும் 90-களின் முற்பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது படம் எடுத்த குழுவினரை பிரதமர் மோடி பாராட்டினார்.
சந்திப்புக்கு பின் பேசிய இயக்குநர் விவேக், ‘‘மோடியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பற்றிய பாராட்டும், உன்னதமான வார்த்தைகளும்தான் படத்தை மேலும் சிறப்புறச் செய்கிறது’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை இழிவுபடுத்த சதி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் இன்று காலையில் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“பேச்சு சுதந்திரத்தின் கொடி ஏந்தியவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கடந்த 5-6 நாட்களாக கடும் கோபத்தில் உள்ளனர். உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் புகழ்வதற்குப் பதிலாக அவர்கள் இழிவுபடுத்துகிறார்கள்.
படத்தை உருவாக்கியவர்கள் தாங்கள் உண்மையாகக் கருதுவதை வெளியிடுகின்றனர். ஆனால் உண்மையைப் புரிந்து கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் இவர்கள் தயாராக இல்லை. படத்தை இழிவு படுத்தி பிரச்சாரம் செய்ய கடந்த 5-6 நாட்களாக சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
பிரச்சினை திரைப்படம் அல்ல, தேச நலன்களுக்காக உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும். இந்தப் படத்தில் உடன்படாதவர்கள், அவர்களின் உணர்வின் அடிப்படையில் எதிர்க்கின்றனர். வேண்டுமென்றே மறைக்கப்பட்ட உண்மை இப்போது வெளிவருவதால் சில விமர்சகர்கள் வருத்தம் அடைகிறார்கள்’’ எனக் கூறினார்.
உத்தரப்பிரதேசம், ஹரியாணா, உத்தரகாண்ட், கோவா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் இந்த திரைப்படத்துக்கு கேளிக்கை வரி இல்லை என அறிவித்துள்ளன.