அரசியல் சாசன சட்ட சிற்பியான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் பிறந்த ஊரில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்மூலம் அம்பேத்கர் பிறந்த ஊரில் மரியாதை செலுத்திய முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
கடந்த 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி, மத்தியப் பிரதேச மாநிலம் மவ் கன்டோன்மென்ட் நகரில் அம்பேத்கர் பிறந்தார். இந்த இடத்தில் மாநில அரசு சார்பில் அம்பேத்கருக்கு பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் நேற்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுபோல, அம்பேத்கர் பிறந்த ஊரான மவ் நகரில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நினைவிடத்தைச் சுற்றிப் பார்த்த மோடி, 11 நாட்களுக்கு நடைபெற உள்ள கிராம சுயாட்சி இயக்கத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “அம்பேத்கர் பிறந்த நாளில் அவர் பிறந்த ஊருக்கு வந்ததில் பெருமைப்படுகிறேன். இந்த பூமிக்கு நான் தலை வணங்குகிறேன். அநீதிக்கு எதிராக வும் சமூக சமத்துவம் மற்றும் சுய மரியாதைக்காகவும் அம்பேத்கர் போராடினார். கிராம சுயாட்சி கிராம வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்” என்றார்.
ஐ.நா.வில் விழா
அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில்அம்பேத்கரின் பிறந்த நாள் விழா நேற்று முதல் முறையாக கொண்டாடப் பட்டது.
ஐ.நா.வுக்கான இந்திய தூதரகம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், ஐ.நா. வளர்ச்சி திட்ட (யுஎன்டிபி) தலைமை நிர்வாகி ஹெலன் கிளார்க் உட்பட பலர் கலந்து கொண்டனர்.