பாகிஸ்தான் சிறையில் அடைக்கப் பட்டிருந்த இந்தியர் ஒருவர் கடந்த 3 தினங்களுக்கு முன்பு உயிரிழந்த தற்கு மாரடைப்பே காரணம் என்று அந்த நாடு நேற்று தெரிவித்தது.
முன்னதாக, இந்த மர்ம மரணம் குறித்து பாகிஸ்தான் அரசின் கவனத்துக்கு இந்தியா கொண்டு சென்றதையடுத்து அந்த நாடு இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்தவர் கிருபால் சிங் (50). கடந்த 1992-ல் வாகா எல்லையைக் கடந்து பாகிஸ்தான் பகுதிக்குள் சென்றதால் இவர் கைது செய்யப்பட்டார். உளவு பார்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கிருபால் சிங்குக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. எனினும், லாகூர் உயர் நீதிமன்றம் அவரை குண்டுவெடிப்பு வழக்கி லிருந்து விடுவித்ததாகவும், ஆனால் என்ன காரணத்தாலோ அவரது மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் சுமார் 25 ஆண்டுகளாக அடைக்கப் பட்டிருந்த கிருபால் சிங் நேற்று முன்தினம் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து, மத்திய அரசு உத்தரவின் பேரில், பாகிஸ்தானுக் கான இந்திய தூதர் ஜே.பி.சிங், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை இயக்குநர் ஜெனரலை சந்தித்துப் பேசினார். அப்போது கிருபால் சிங்கின் மரணத்துக்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய வெளியுற வுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நேற்று கூறும் போது, “கிருபால் சிங் கடந்த 11-ம் தேதி மதியம் 2.55 மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந் தார் என பாகிஸ்தான் அரசு தெரிவித் துள்ளது. மேற்கொண்டு விரிவான தகவலை எதிர்பார்க்கிறோம். மேலும் கிருபால் சிங்கின் உடலை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு அங்குள்ள நமது தூதர் அந்நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்” என்றார்.
இதுகுறித்து கிருபால் சிங்கின் சகோதரி ஜாகிர் கவுர் கூறும்போது, “பொருளாதார வசதி மற்றும் அரசியல் பின்னணி இல்லாத காரணத்தால் எனது சகோதரரின் விடுதலைக்காக எங்களால் போராட முடியவில்லை. இந்த விஷயத்தில் அரசியல்வாதிகள் யாரும் உதவ முன்வரவில்லை” என்று குற்றம் சாட்டி உள்ளார்.