சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தாலும் அசாம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் குவாஹாட்டி யில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி விஷயத்தில் அரசியல் செய்ய லாகாது. அசாமில் சட்டப்பேரவை தேர்தலில் ஒருவேளை பாஜக தோல்வி அடைந்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.
அதே சமயம் மத்தியில் உள்ள கட்சியே மாநிலத்திலும் ஆட்சியை பிடித்தால் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பிரச்சினை சுமூகமாக தீர்க்க முடியும். எனவே மக்கள் அதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். கடந்த 60 ஆண்டுகளில் நடக்காத வளர்ச்சியை, 5 ஆண்டுகளில் நடத்தி காட்டுவோம்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது, வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் தரவரிசையில் அசாம் 5-வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது ஏழை மாநிலங்களில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
அசாமில் நடந்து முடிந்த முதல்கட்ட தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் மக்கள் வாக்களித் துள்ளனர். இதற்காக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது, மாற்றத்துக் கான தீர்ப்பாக நிச்சயம் அமையும் என நம்புகிறேன்.
இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.