உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் இந்திய-மே.இ.தீவுகள் போட்டியை முன் வைத்து இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் (என்.ஐ.டி.) பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மனித வள மேம்பாட்டுத்துறை குழு ஒன்று அங்கு விரைந்துள்ளது.
நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 அரையிறுதியில் இந்தியா தோற்றுப் போனதையடுத்து கல்வி நிறுவன வளாகத்தில் காஷ்மீரி மற்றும் காஷ்மீரி அல்லாத மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அதாவது, காஷ்மீரி மாணவர்கள் இந்தியத் தோல்வியை பட்டாசு வெடித்து கொண்டாடினர். காஷ்மீரைச் சேராத மாணவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றினர். இதனையடுத்து இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜம்மு - காஷ்மீரில் மூவர்ணக்கொடியை ஏற்றினால் கடும் விளைவுகள் ஏற்படுவது வழக்கமாகி வருவதால் காஷ்மீர் அல்லாத மாணவர்களை போலீஸார் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டாம் என்று எச்சரித்தனர்.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையனறு கல்லூரி நிர்வாகம் மாணவர் விடுதியை மூடியதோடு வகுப்புகள் நடைபெறுவதையும் நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், செவ்வாய் இரவு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அல்லாத பொறியியல் மாணவர்கள் கல்வி நிலைய வளாகத்திற்கு வெளியே சில கோரிக்கைகளை வைத்து அணி திரண்டனர், இதில் போலீஸார் நடவடிக்கையில் இந்த 8 மாணவர்கள் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து மாணவர்களிடமிருந்து தொடர்ந்து பதற்றம் நிறைந்த தொலைபேசி அழைப்புகள் வர மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகக் குழு ஒன்று காஷ்மீர் விரைந்துள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இது குறித்து முதல்வர் மெகபூபா முப்தியிடம் பேசியிருப்பதாகவும் தெரிகிறது.
மாணவர்கள் பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் கல்லூரி வளாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
புதன்கிழமையான இன்றும் கூட காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்பறைக்குச் செல்ல, காஷ்மீர் அல்லாத மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், அதாவது போலீஸ் நடவடிக்கையை எதிர்த்து வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
மேலும், ஜம்முவில் ஆளும் பாஜக-பிடிபி கட்சியினரை எதிர்த்து பெற்றோர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். அதாவது தேச விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி இவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றமான சூழலில் தேர்வுகளை நடத்த என்.ஐ.டி. எப்படி முன்வந்தது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் அங்குள்ள சூழ்நிலையை கவனத்தில் எடுத்துக் கொள்ளவும் தீர்வு காணவும் மத்திய மனிதவள மேம்பாட்டுக் குழுவினர் ஸ்ரீநகர் விரைந்துள்ளனர்.