இந்தியா

தனியார் மூலம் ரேஷன் பொருள் விநியோகம்: கர்நாடக மாநிலத்தில் அறிமுகம்

செய்திப்பிரிவு

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக முறை மூலம் அரசு வழங்கும் உணவுப் பொருட்களை தனியார் கடைகள் மூலம் விநியோகிக்கும் திட்டத்தை நாட்டிலே முதல் முறையாக கர்நாடக அரசு அறிமுக‌ப்படுத்தியுள்ளது.

முதல் கட்டமாக பெங்களூரில் உள்ள காக்ஸ் டவுன் பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ‘புட் வேர்ல்டு' எனும் தனியார் கடை மூலம் விநியோகிக்கும் முறை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கர்நாடக மாநில உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ‘‘பொது விநியோக முறை மூலம் நியாயவிலை கடைக‌ளில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருள்கள் அதே விலை மற்றும் தரத்தில் தனியாருக்குச் சொந்தமான ‘புட் வேர்ல்டு' கடைகள் மூலம் விநியோகிக்கப்படும்.

முதல் கட்டமாக இங்குள்ள வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் 687 குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்படும். சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்தால் பெங்களூரில் உள்ள அனைத்து ‘புட் வேர்ல்டு' கடைகளிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

தனியார் கடைகள் தினமும் காலை முதல் இரவு 9 மணி வரை திறந்திருப்பதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான நேரத்தில் உணவுப் பொருள்களை வசதியாக வாங்க முடியும்.மேலும் ஃபுட் வேர்ல்டு கடையில் கிடைக்கும் வேறு பொருட்களையும் அவர்கள் ஒரே இடத்தில் வாங்கவும் முடியும்.இது கடைக்காரர்களுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் லாபகரமாக அமையும். தேவையில்லாமல் கோடிக் கணக்கில் செலவளிக்கப்படும் அரசின் பணம் மிச்சப்படுத்தப்படும்.

இந்த கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் உணவுப் பொருள்களை வழங்குவதால் மோசடி செய்வதற்கு வாய்ப்பில்லை. அதே நேரத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மிகத் துல்லியமான அளவில் உணவு பொருட்கள் வழங்க எல்லா வசதியும் செய்யப்பட்டுள்ளது''என்றார்.

கர்நாடக அரசின் இந்த புதிய திட்டத்திற்கு நியாய விலைக் கடை ஊழியர்களும், எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஏராளமான ஊழியர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும், தனியாருக்கு அரசின் சேவையை வழங்குவதால் எளிதில் முறைகேடு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.​

SCROLL FOR NEXT