இடம்: புதுச்சேரி

 

படம்: எம். சாம்ராஜ்

இந்தியா

கேரளாவில் 77.45%, அசாமில் 85.04%, புதுச்சேரியில் 89.83% வாக்குகள் பதிவு

மோகன் கணபதி

புதுடெல்லி: வாக்குப் பதிவு நிறைவு பெற்ற நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி கேரளாவில் 77.45% வாக்குகளும், அசாமில் 85.04% வாக்குகளும், புதுச்சேரியில் 89.83% வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதியான வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகவில்லை.

அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறற்றது. ஆறு மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் அனைவரும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

புதுச்சேரியில் 89.83% வாக்குகள் பதிவு:

30 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் 10 லட்சத்து 14 ஆயிரத்து 70 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு காலை 11 மணி நிலவரப்படி 37% வாக்குகளும், பகல் 1 மணி நிலவரப்படி 56.83% வாக்குகளும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 72.40% வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 86.92% வாக்குகள் பதிவாகின. இறுதி நிலவரப்படி 89.83% வாக்குகள் பதிவாகின.

இங்கு என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் இந்த தேர்தலில் முக்கிய சக்திகளாகக் கருதப்படுகின்றன.

          

கேரளாவில் 77.45% வாக்குகள்:

140 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளாவில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 2.71 கோடி வாக்காளர்களைக் கொண்ட கேரளாவில் 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காலை 11 மணி நிலவரப்படி கேரளாவில் 33.30% வாக்குகளும், பகல் 1 மணி நிலவரப்படி 49.70% வாக்குகளும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 62.71% வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 75.01% வாக்குகள் பதிவாகி உள்ளன. மாலை 6 மணி நிலவரப்படி 77.45% வாக்குகள் பதிவாகின.

இங்கு ஆளும் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேநேரத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த தேர்தலில் முக்கிய சக்தியாக களத்தில் உள்ளது.

அசாமில் 85.04% வாக்குகள் பதிவு:

126 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அசாமில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். காலை 11 மணி நிலவரப்படி இந்த மாநிலத்தில் 38.92% வாக்குகள் பதிவாகின.

பகல் 1 மணி நிலவரப்படி 59.63% வாக்குகளும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 75.91% வாக்குகளும் பதிவாகின. மாலை 5 மணி நிலவரப்படி 84.42% வாக்குகள் பதிவாகி உள்ளன. மாலை 6 மணி நிலவரப்படி அசாமில் 85.04 சதவீத வாக்குகள் பதிவாகின.

அசாமில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வெப்ப அலை தாக்கம் காரணமாக, வாக்குச்சாவடிகளில் நிழற்குடைகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டன. முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மற்ற மாநிலங்களுடன் சேர்த்து மே மாதம் 4-ம் தேதி வெளியாகவுள்ளன.

SCROLL FOR NEXT