இந்தியா

ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம்: விமானப் படை முன்னாள் துணை தளபதியிடம் சிபிஐ விசாரணை

பிடிஐ

ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரத்தில் விமானப் படை முன்னாள் துணை தளபதி ஜெ.எஸ்.குஜ்ராலிடம் சிபிஐ இன்று (சனிக்கிழமை) விசாரணை மேற்கொண்டது.

கடந்த 2005-ல் ஹெலிகாப்டர் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட விவிஐபிக்களின் பயன்பாட்டுக்காக அகஸ்டாவெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3600 கோடி மதிப்பில் 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க கடந்த 2010 பிப்ரவரியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தைப் பெற இந்திய அரசியல் தலைவர்கள், விமானப் படை அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக விமானப் படை முன்னாள் துணை தளபதி ஜெ.எஸ்.குஜ்ராலிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இதற்காக குஜ்ரால் இன்று சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு இன்று (சனிக்கிழமை) காலை வந்தார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குஜ்ராலை சாட்சியாக கருதியே விசாரித்து வருவதாக சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என சிபிஐ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து எஸ்.பி. தியாகியின் உறவினர்கள் சந்தீப், ராஜீவ், சஞ்சீவ் ஆகியோர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT